×

பழநியில் சாலைகளில் உலா வரும் குதிரைகள்: வாகன ஓட்டுனர்கள் அவதி

பழநி: பழநியில் சாலைகளில் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி  உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து  செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கும், பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, பெரியாவுடையார் போன்ற பிற கோயில்களுக்கு செல்லவும் ஆதிகாலம் தொட்டு குதிரைவண்டிகளை பயன்படுத்தி  வந்தனர்.

தேசிய அளவில் சில ஊர்களில் மட்டுமே தற்போது குதிரை வண்டிகள் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள பழநி நகரமும் ஒன்றாகும். இந்நகரில் தற்போது 70க்கும் மேற்பட்ட குதிரைவண்டிகள் உள்ளன. பழநி  கோயிலுக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்வதற்காக குதிரைவண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்களும் வித்தியாசமான இந்த பயணத்தை விரும்பி, ஆர்வமுடன் குதிரை வண்டிகளில் சென்று வருகின்றனர். இந்த வண்டிகளை இழுக்க  பயன்படும் குதிரைகள் வயதான பின்னர், பராமரிக்க முடியாததால் அதன் உரிமையாளர்கள் விரட்டி விட்டு விடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

இதுபோன்று விரட்டி விடப்பட்ட குதிரைகள் தற்போது பழநி நகரில் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. உண்ண உணவில்லாமல் காகிதங்களை சாப்பிட்டும், ஆங்காங்கு விளைந்துள்ள புற்களையும் சாப்பிட்டும் திரிகின்றன. பல குதிரைகள்  சாலைகளின் நடுவில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவ்வப்போது விபத்துக்களில் சிக்கி காயத்துடன் சில குதிரைகள் சுற்றித்திரிகின்றன. விலங்குகள் நல அமைப்புகள் இந்த விஷயத்தில் உரிய அக்கறை  செலுத்தி கேட்பாரற்று திரியும் குதிரைகளை மீட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : roads ,motorists ,Palani ,avadi , Horses riding on the roads of Palani: motorists
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்