×

தேனி-மதுரை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மரணக்குழிகள்

*இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

தேனி : தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரணக்குழிகளால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தேனியில் இருந்து ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பராமரிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. நான்குவழிச்சாலையென்றாலும், நான்குவழிச்சாலைக்கேற்ற அகலமான டிவைடர் இல்லாமல் இரண்டு அடி அகலமுள்ள டிவைடர் மட்டுமே அமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் இருவழியையொட்டி இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான பாதை பிரிக்கப்படவில்லை.

இதனால் இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது, ஒன்றையொன்று முந்திக்கொண்டு பஸ்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி செல்லும் வழியில் கருவேல்நாயக்கன்பட்டி, குன்னூர், அரப்படித்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே விபத்தினை ஏற்படுத்தும் பள்ளங்கள் அதிகமாக உள்ளன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோர் இக்குழிகளை அறியாமல் விபத்துக்குள்ளாகும் அவலம் உள்ளது.

எனவே, உயிர்பலி ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைத் துறையினர் இச்சாலையினை கவனத்தில் கொண்டு சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்
வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : highway ,Theni-Madurai ,Theni- madurai ,National Highways Death Pits In Roads , Theni,madurai ,National highways,roads
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!