×

நாடு முழுவதும் அலுவலக பயன்பாடு சமஸ்கிருத மொழிக்கு அம்பேத்கர் பரிந்துரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

நாக்பூர்: ‘சமஸ்கிருதத்தை தேசிய அலுவல் மொழியாக பயன்படுத்த அம்பேத்கர்   பரிந்துரைத்தார்,’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.  சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் கட்டிட திறப்பு நிகழ்ச்சி, வீடியோ கான்பரன்சிங் முறையில் நேற்று நடந்தது. இதில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, நாக்பூர் எம்பியும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பாப்டே பேசியதாவது:

பாபா சாகேப் அம்பேத்கர், அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை நன்கு புரிந்து வைத்திருந்தவர். மக்களுக்கு எது தேவை என்றும் அவர் உணர்ந்திருந்தார். அவர், நாடு முழுவதும் தேசிய அளவில் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தலாம் என அப்ேபாதே பரிந்துரை செய்திருந்தார். நமது பழங்கால நூலான நீதி சாஸ்திரம், அரிஸ்டாட்டில் மற்றும் பெர்சியன் நியதிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. நமது மூதாதையர்கள் கூறிய கருத்துகளை புறக்கணிப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் எந்த மொழியில் உரையாற்ற வேண்டும் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது. இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா.  பேசும்போது பயன்படுத்தும் மொழி மற்றும் பணியில் பயன்படுத்தப்படும் மொழிகளின் காரணமாக முரண்பாடு ஏற்படுவது காலங்காலமாக உள்ளது. துணை நீதிமன்றங்களில் எந்த மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இது குறித்து ஆராய வேண்டியதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஆனால், அம்பேத்கர் இந்த கோணத்தில் முன்கூட்டியே சிந்தித்துள்ளார். தமிழ் மொழி வட இந்திய மாநிலங்களில் ஏற்கப்படுவதில்லை. இதுபோல், இந்தி தென்னிந்திய மாநிலங்களில் ஏற்கப்படுவது கிடையாது. ஆனால், வட இந்திய மாநிலங்கள் மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் ஆகிய இரண்டு பகுதிகளிலுமே சமஸ்கிருதத்துக்கு எதிர்ப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்திருக்கிறது. இவ்வாறு பாப்டே பேசினார்….

The post நாடு முழுவதும் அலுவலக பயன்பாடு சமஸ்கிருத மொழிக்கு அம்பேத்கர் பரிந்துரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Nagpur ,Ampedkar ,Chief Justice ,PA ,Justice ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...