தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் தொங்கிய ஆம்னி பேருந்து: 60 அடி உயரத்தில் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி

சென்னை: செங்கல்பட்டு அருகே, தடுப்பு சுவரின் மீது மோதி 60 அடி பள்ளத்தில் அந்தரத்தில் தொங்கிய தனியார் பேருந்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் நேற்று சென்னையில் இருந்து தேனி நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் சென்றது. பஸ்சை  தேனி  சாதிக்பாஷா (40) ஓட்டி வந்தார். பஸ்சில் கண்டக்டர் உள்பட 3 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

தேனியில் இருந்து சென்னையில் பயணிகளை நேற்று நள்ளிரவு இறக்கி விட்டு மீண்டும் தேனியை நோக்கி சென்றபோது பரனூர் ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் மீது கட்டுப்பாட்டை இழந்து பஸ் வேகமாக  மோதியது. மேம்பாலத்தின், நடுவே மோதி  60 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

சம்பவம்  பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் ரோந்து போலீசார் வந்து காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பஸ்சை வெளியில் எடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால், சாலையின்  இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பின்பு பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்பு போக்குவரத்து சீரானது.

இது சம்பந்தமாக செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது,  பேருந்தில் இரண்டு ஓட்டுனர்களும் ஒரு நடத்துனர் உள்பட மூன்று பேர் மட்டுமே பயணித்துள்ளனர். அப்போது, மழையின் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பஸ்  தடுப்பு சுவரில் மோதியதாக தெரிவித்தனர். அதில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததினால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Related Stories:

>