×

17 ஆண்டு பணி அனுபவம் உள்ள ஆசிரியர் உதவி பேராசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் மார்க் கோரி வழக்கு: அதிகாரிகள் பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பதினேழு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவருக்கு உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், வெயிட்டேஜ் மார்க் வழங்குவது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச்  ேசர்ந்த நாகலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: எம்எஸ்சி, எம்பில் முடித்துள்ளேன். விருதுநகரில் முதுகலை பட்டதாரி (கணிதம்) ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 2018ல் நடந்த ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 17 ஆண்டுகளாக முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுகிறேன். இந்நிலையில், தமிழக கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அரசாணைப்படி, கல்விப்பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எனது 17 ஆண்டுகால பணி அனுபவத்திற்கு உரிய வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கக் கோரி மனு அளித்திருந்தேன்.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது பணி அனுபவத்திற்குரிய வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவும், எனக்கு உதவி பேராசிரியர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். அப்போது அவர், ‘‘மனுதாரருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது குறித்து டிஆர்பிதலைவர், உயர்கல்வித்துறை செயலர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோர் 12 வாரத்திற்குள் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.


Tags : Assistant Professor ,Icort Branch , Professor's work, Weightage Mark, Corey Case, Icort Branch, Order
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள...