×

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடத்திற்குள் நுழைந்த சமூக அமைப்பினரால் பரபரப்பு: தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதம்

தண்டையார்பேட்டை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கொடுங்கையூரில் உள்ள அரசு விடுதி கட்டிடத்துக்குள் நுழைந்த தேவர் அமைப்பை சேர்ந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை வெளியேற்றி கேட்டை பூட்டினர்.    கொடுங்கையூர் சிட்கோ மெயின் ரோட்டில் ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் சமூக நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மாணவர் விடுதி கட்டிடம், தாட்கோ நிறுவனம் மூலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த இடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது எனக்கூறி அறக்கட்டளை சார்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கட்டிட பணிகள் நடைபெற தற்காலிக தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த இடம் மற்றும் கட்டிடத்தில் அத்துமீறி யாரும் பிரவேசிக்கக் கூடாது, எனவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஏற்பாட்டிற்காக, மேற்கண்ட இடத்தில் உள்ள விடுதி கட்டிடத்திற்குள் நேற்று அத்துமீறி நுழைந்த தேவர் அமைப்பினர், அங்கு அரசு சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்றிவிட்டு, சமைப்பதற்காக ஏற்பாடுகளை செய்தனர். தகவலறிந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை ஆட்சியர் ஹேமலதா, தாட்கோ உதவி பொறியாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய் சரண் தேஜஸ்வி, எம்கேபி நகர் உதவி கமிஷனர் அழகேசன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் துரை ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளை வெளியேற்றி, அந்த இடத்தின் கேட்டை இழுத்து பூட்டினர். அப்போது, போலீசாருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற ஆணை உங்களுக்கு சாதகமாக இருந்தால் உங்களை அனுமதிப்போம் என்று போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற ஆணை அவர்களுக்கு சாதமாக இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் அங்கு திரண்டு இருந்த தேவர் அமைப்பினர் சமையல் பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மாதவரம் மூலக்கடையில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாதவரம் போலீசார், நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை. இங்கு பட்டாசு வெடிக்கக்கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சங்க நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசாரை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Tags : government building ,Supreme Court ,activists , High Court, State Building, Police, Argument
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...