அதிமுக பிரமுகர் கொலையில் 7 பேர் கைது

பெரம்பூர்: கொளத்தூரில் அதிமுக பிரமுகர் படுகொலையில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம் ராஜமங்களம் 7வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (58). இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தினேஷ்குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ஜானகிராமன் ஐ.சி.எப்.பில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். மேலும் ஐ.சி.எப் அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும், ஐ.சி.எப். கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்தார்.

தீபாவளியன்று தனது நண்பர்களுடன் கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 31வது தெரு வழியாக இரவு 9.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் இவர் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளி ஜானகிராமனை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த ஜானகிராமன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து புளியந்தோப்பு சரக துணை ஆணையர் சாய்சரண் தேஜஷ்வி குற்றவாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேல்மணி, ஜெகநாதன் மற்றும் சண்முகம் கொண்ட தனிப்படை அமைத்தார்.

தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஜி.கே.எம் காலனி சுடுகாடு அருகே பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கூறிய தகவலின்படி மேலும் 3 பேர் என மொத்தம் 7 பேரை படித்து விசாரித்தனர். அதில், பரபரப்பு தகவல் வெளியானது. ஜானகிராமன் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள இளங்காளியம்மன் கோயிலில் செயலாளராக இருந்து வந்துள்ளார். அதே கோயிலில் பரம்பரை, பரம்பரையாக பூசாரி வேலை செய்து வருப வர் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் (25).  இவருக்கும், ஜானகிராமனுக்கும் அடிக்கடி கோயில் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

கோயிலில் இருந்து ஓம்பிரகாசின் நண்பர்களை ஒவ்வொருவராக வேலையில் இருந்து ஜானகிராமன் நீக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து எங்கே தன்னையும் கோயிலில் இருந்து ஜானகிராமன் வெளியேற்றி விடுவாரோ என்ற அச்சத்திலும், கோயில் தன் கையைவிட்டு பறிபோய் விடுமோ என்ற ஆதங்கத்திலும் இருந்ததால் தீபாவளியன்று ஓம்பிரகாஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து  ஜானகிராமனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து ஓம்பிரகாஷ் (25), அவரது நண்பர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த அனிஷ் (25), குமரன் (25), சர்போஜி (22), ரவிபிரசாத் (22), சரத்குமார் (25), விஜய் (25) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>