×

பங்குச்சந்தை திடீர் ஏற்றம்: பங்குகள் மதிப்பு ஒரே நாளில் ரூ2.73 லட்சம் கோடி உயர்வு

மும்பை: பங்குச்சந்தையில் நேற்று திடீர் ஏற்றம் காணப்பட்டது. பங்குகள் மதிப்பு ஒரே நாளில் ரூ2.73 லட்சம் கோடி உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் வர்த்தக இடையில் அதிகபட்சமாக 601 புள்ளிகள் உயர்ந்தது 39,851 புள்ளிகளை எட்டியது.. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி  174 புள்ளிகள் அதிகரித்து மொத்தம் 11,801 புள்ளிகளை தொட்டது. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ் பாங்க், வேதாந்தா, மகேந்திரா அன்ட் மகேந்திரா, ஆக்சிஸ் பாங்க் ஆகிய பங்குகளின் விலை உயர்ந்தது. இதே போன்று ஆட்டோ மற்றும் மெட்டல் பங்குகள் மதிப்பு உயர்ந்து வர்த்தகமானது. கடந்த நான்கு மாதங்களில் அதிகபட்சமாக நேற்றைய வர்த்தகத்தில்தான் பங்குச்சந்தைகள் அதிகபட்ச ஏற்றம் அடைந்தன.

வங்கிகளின் காலாண்டு அறிக்கைகள் வெளியாகும் நிலையில், அவற்றின் செயல்பாடு நம்பிக்கை அளிக்கும் வகையில் காணப்படுவதால் பங்கு விலை ஏற்றம் பெற்றதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 581.64 புள்ளிகள் உயர்ந்து மொத்தம் 39,831.84 புள்ளிகளில் நிலை பெற்றது. அதேபோல், நிப்டி 159.70 புள்ளிகள் உயர்ந்து மொத்தம் 11,786.85 புள்ளிகளில் நிலை பெற்றது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு நேற்று ஒரே நாளில் 2,73,355.21 கோடி அதிகரித்து ரூ1,52,04,693.34 கோடி ஆனது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Stock market, stocks value, rise
× RELATED தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.920 குறைந்தது