×

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் போது விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தாம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆழ்துளை கிணற்றை மூடும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் நடுகா ட்டுப்பட்டி கிராமத்தில் 25.10.2019 அன்று திரு.பிரிட்டோ ஆரோகியராஜ் என்பவரது நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் அவரது 2 வயது மகன் சுர்ஜித் தவறி விழுந்துவிட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு.வளர்மதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு, பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக அதிநவீன இயந்திரங்களை கொண்டு சிறுவன் சிக்கி கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே புதியதாக ஒரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டும் போது கடினமான பாறைகள் இருந்ததால் மீட்பு பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

அந்த சிரமங்களை எல்லாம் வல்லுநர் குழுவுடன் சரிசெய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவு, பகலாக மீட்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் சிறுவன் சுர்ஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கடைபிடிக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து விதிகள் வகுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவன குறைவு ஏதேனும் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மீட்புப்பணிகளை இரவு, பகலாக மேற்கொண்ட அதிகாரிகள், அமைச்சர்கள், பொதுமக்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Surjith , Deep well, baby surjith, family, chief minister
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்