×

பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மணப்பாறை: பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் குழந்தை சுஜித்தின் உடல் சவப்பெட்டியில் வைத்து ஆவாரம்பட்டி அருகே பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது.

குழந்தை சுஜித் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து 10.30 மணி அளவில் துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்து அழுகிய நிலையில் இருப்பதாக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் சில மணி நேரத்தில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டது.

அதன் பின்னர் சுஜித்தின் உடலை சிறிய அளவிலான சிலுவை குறி பொறிக்கப்பட்ட சவப்பெட்யில் வைத்து மருத்துவமனைக்கு வெளியே வைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தியால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Baby Sujith ,cemetery , Baby Sujith, body ,restored,Fatima Budur ,cemetery
× RELATED திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி...