×

30 ஊழியர்களுக்கு 10 மாத ஊதிய நிலுவை விருதுநகர் கலெக்டரை கண்டித்து தாசில்தார் ‘வாட்ஸ்அப் வாழ்த்து’: சமூக வலைத்தளங்களில் வைரல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரயில்வே இருவழிப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள 30 தொழிலாளர்களுக்கு 10 மாதமாக ஊதியம் நிலுவையில் இருப்பதை கண்டித்து கலெக்டர் சிவஞானத்திற்கு, தாசில்தார்  ராமநாதன் வாட்ஸ்அப்பில் அனுப்பிய தீபாவளி வாழ்த்து வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், ரயில்வே இருவழிப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தலா ஒரு தாசில்தார் தலைமையில்  15 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டன. இதில், முதல்  குழு கொக்கலாஞ்சேரி  முதல் ஆர்.ஆர்.நகர் வரையிலும், இரண்டாவது குழு ஆர்.ஆர்.நகர் முதல் கோவில்பட்டி வரையும் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. குழுக்கான அலுவலகம் வாடகைக்கு பிடித்துள்ளனர். அதற்கான மின்கட்டணம், குடிநீர் கட்டணம், அலுவலக பர்னிச்சர்கள் அனைத்தும் கடனுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அலுவலக வாடகை 10 மாதங்களாக நிலுவையில் உள்ளது.  குழுக்களைச் சேர்ந்த 30 பேருக்கு 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இப்பணிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.40 கோடி தமிழக அரசிடம் உள்ளது.இந்நிலையில், ஒரு குழுவின் தலைவராக உள்ள தாசில்தார் ராமநாதன், கலெக்டர் சிவஞானத்திற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள தீபாவளி வாழ்த்து வைரலாகி வருகிறது. அந்த வாழ்த்தில், ‘‘தாங்கள் இந்த மாவட்டத்தில் கலெக்டராக  பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவடைந்து, 4வது ஆண்டு நடக்கிறது. இந்த 3 ஆண்டுகளில் அரசிடமிருந்து நிதி பெற்று தங்களது மாத ஊதியம், வருட ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை, பயணப்படி, ஊதிய நிர்ணயக்குழுவின் நிலுவை  அனைத்தும் பாக்கியில்லாமல் பெற்று, தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டீர்கள்.

அதேநேரம் தங்களால் பணிநியமனம் செய்யப்பட்ட 30 குடும்பங்கள் கடந்த 10 மாதமாக ஊதியம் இல்லாமல் வாழ்வா, சாவா போராட்டம் நடத்தி வருவது தங்களுக்கு தெரியுமா, தெரியாதா? கண்டும் காணாமல் கல் நெஞ்சாக இருக்கிறீர்களா?  எங்களுக்கான நிதி ரூ.40 கோடிக்கு மேல் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்த பின்பும், அதை தமிழக அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டியது யாருடைய பொறுப்பு? உங்களது நிர்வாக சீர்கேட்டால் ஓராண்டு காலம் தாமதமானது. அலுவலக  வாடகை, முன்பணம் இதுவரை தரவில்லை.
அரசாங்கத்திற்காக வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்டாமல் நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்? வாடகை தராததால் அலுவலகத்தை காலி செய்ய, உரிமையாளர் நிர்பந்தம் செய்கிறார்.  30 குடும்பங்களும் ஊதியம் பெறாத நிலையை  சொல்லி புரிய வைக்க வேண்டுமா? நீங்கள் உங்களது குடும்பத்துடன் உல்லாசமாக தீபாவளி கொண்டாடலாம். ஆனால், எங்களது வீடுகளில் தீபாவளி கொண்டாட்டம் கிடையாது.  உங்களுக்கு கீழ் பணியாற்றும் எங்களது ஊதியத்தையே அரசு நிதி ஒதுக்கியும் பெற்றுத்தர முடியாத  நீங்களா இந்த பின்தங்கிய மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கப் போகிறீர்கள். உங்களது விருப்பு, வெறுப்பு நிர்வாக சீர்கேடு குறித்து, பொதுத்தளத்தில் எங்களுடன் நீங்கள் விவாதிக்க தயாரா? சவால் விடுகிறேன்.இந்திய வரலாற்றில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் நிர்வாகம் பதிவாகி உள்ளது. விருதுநகர் மாவட்ட வரலாற்றில் உங்களது நிர்வாகமும் பதிவு செய்யப்படும். மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்..’’ என முடித்துள்ளார்.



Tags : Dasaltar ,Virudhunagar Collector , salary ,arrears ,30 employees, Collector , social websites
× RELATED விபத்துகளில் தாய், தந்தையை இழந்த 31...