×

பேரணாம்பட்டு மையப்பகுதியில் இயங்கும் 60 ஆண்டுகால பஸ் நிலையம் தனியாருக்காக இடம் மாற்றுவதா?: பேரணாம்பட்டு மையப்பகுதியில் இயங்கும்

பேரணாம்பட்டு:  பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில்  இயங்கி வரும் 60 ஆண்டு கால பேருந்து  நிலையத்தை தனியார் வீட்டுமனைகள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக  நகரை  விட்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் இடமாற்றம் செய்வதற்கு நகர மக்கள்  மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரம்,  கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களை ஒட்டி தமிழக எல்லையில் பேரணாம்பட்டு நகரம்  அமைந்துள்ளது. ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வர்த்தக  நோக்கிற்காகவும், குடும்ப உறவுகளை தேடியும் பேரணாம்பட்டிற்கு   ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். அதோடு வேலூர் மாவட்டத்துக்கு இரண்டு  மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பேரணாம்பட்டு வழியாக  வேலூர் மாவட்டத்துக்குள் நுழைகின்றனர்.அதேபோல், ஆந்திர மாநிலம்  வி.கோட்டா மண்டலம், குப்பம் மண்டலம், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்  இருந்தும், பேரணாம்பட்டு, ஆம்பூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும்  விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இரண்டு  புறங்களுக்கும் வந்து செல்கின்றனர்.

பேரணாம்பட்டு   நகராட்சி 21  வார்டுகளை கொண்டும், பேரணாம்பட்டு ஒன்றியம் 51 ஊராட்சிகள் கொண்டதாகவும்  உள்ளது. நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்  வசித்து வருகின்றனர்.  மேலும்  தனியார் தோல் தொழிற்சாலைகள், பீடி  சுருட்டும் தொழிலகங்கள் நிறைந்திருப்பதால் அதுதொடர்பான தொழிலாளர்களும்  பேரணாம்பட்டு வந்து செல்கின்றனர்.இவர்களின் போக்குவரத்து வசதிக்காக  நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கு  முன்பு ஏற்படுத்தப்பட்டது. 18 சென்ட் பரப்பளவுள்ள இந்த இடம் முன்பு  போலீசாருக்கான கவாத்து பயிற்சி மைதானமாக இருந்தது. தற்போது பேரணாம்பட்டு  பேருந்து நிலையமாக இயங்கி வருகிறது. பேரணாம்பட்டிலிருந்து நாள்தோரும்  சென்னை, பெங்களுர், வீ.கோட்டா , குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. இதனருகில் 21 சென்ட் பரப்பளவில் காவல் நிலையம்  அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களையும் சேர்த்தால்.  39 சென்ட பரப்பளவில்  இருக்கின்ற பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இங்குள்ள காவல்  நிலையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று பேரணாம்பட்டு நகர மக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் பேரணாம்பட்டு நகரம் மட்டுமின்றி  நகரை சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள் என்பது  அவர்களின் கருத்து.

 ஆனால், இதில் தங்கள் சுயலாபத்தை கருத்தில்  கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களை  வைத்து உள்ளூர் அமைச்சரிடம் அணுகி பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம்  செய்வதற்கு பதில் பங்களாமேடு அருகே பேரணாம்பட்டு புதிய பஸ் நிலையத்தை  ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு அவர்கள் அந்த  இடத்தில் பஸ் நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்பில் 8 ஏக்கர் நஞ்சை நிலத்தை  விதிகளுக்கு மாறாக புஞ்சை நிலமாக மாற்றி தடையில்லா ஆணை வாங்கி அங்கு  வீட்டுமனைப்பிரிவுகளை ஏற்படுத்தியதுதான் காரணம்.
இவ்வாறு பஸ்  நிலையம் ஏற்படுத்தினால் அதற்காக தாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை இலவசமாக தரவும்  அவர்கள் ஒப்புக் கொண்டனர். இவர்களின் இந்த முயற்சிக்கு ஏதுவாக அப்போதைய  கலெக்டர் ராமன், கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி பேருந்து நிலைய இடத்தை ஆய்வு  செய்தார். இதையறிந்த திமுக, காங்கிரஸ், பாஜ, வணிகர் சங்கங்கள் என பல  தரப்பினரும் ஒன்றிணைந்து பங்களாமேடு பகுதியில் புதிய பேருந்து நிலையம்  அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதற்கு கலெக்டர் ராமன், அவர்களது  எதிர்ப்பை கோரிக்கையாக மனுவாக எழுதி கொடுக்கும்படி தெரிவித்து விட்டு  சென்றார்.
அதை தொடர்ந்து அனைத்து கட்சிகள், பொதுமக்கள்,  வர்த்தகர்கள் இணைந்து பேருந்து நிலைய இடமாற்றத்தை கண்டித்து  பலமுறை  ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கலெக்டர் ராமன் தலைமையில் வேலூரில்  நடந்த கருத்துக்கேட்பு கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் முடிவு எட்டப்படாமல்  முடிந்தது. அதேபோல் பேரணாம்பட்டு தனியார் மண்டபத்தில் நகரஅமைப்பு அலுவலர்  மற்றும் அதிகாரிகள் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு  பொதுமக்களும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால்  கூட்டம் முடிவு எட்டப்படாமலே முடிந்தது.

இதனால் பேரணாம்பட்டு பஸ்  நிலைய பிரச்னை தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வரும் நிலையில், பழைய  பேருந்து நிலையத்தில் தொடர்ந்து நெரிசலுடன் போராட வேண்டிய நிலைக்கு  பேரணாம்பட்டு நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு  இவ்விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் அன்று பொதுமக்களின் நலனுக்காக போலீஸ்  கவாத்து மைதானத்தை பஸ் நிலையமாக்கியதை போல், தற்போது அதன் அருகில் உள்ள  காவல் நிலையத்தையும் காலி செய்து அந்த இடத்தையும் சேர்த்து புதிய பஸ்  நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே பேரணாம்பட்டு மக்களின்  எதிர்பார்ப்பு.

புதிய பேருந்து நிலையத்தில் விதிமீறலும் பதில் தர மறுக்கும் அதிகாரிகளும் வீட்டுமனை  பிரிவுகள் அமைக்கும்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு  குறைந்த  விலையில் ஒருவருக்கு ஒரு பிளாட் வீதம் ஒதுக்க வேண்டும் என்பது நகர ஊரமைப்பு  டிடிசிபி விதி. ஆனால் அவ்வாறு செய்யாமல் தனி நபர் மீது 6 மனைகள்  பேரணாம்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   விதிமீறல் குறித்து நகர ஊரமைப்பு துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டம்  மூலம் பொதுமக்கள் கேள்வி கேட்டால் அதற்கு எந்த பதிலையும் அதிகாரிகள்  அளிக்கவில்லை.  பேருந்து நிலையம்  வரும் 50 ஆண்டுகளின் தேவையை கருத்தில்  அமைக்க வேண்டும் என்பதால்.  தற்போது இலவசமாக பேருந்து நிலையம் அமைக்க  கொடுத்துள்ள ஒரு ஏக்கர் இடம் போதுமானதாக இல்லை. இந்த இடத்தில் பேருந்து  நிலையத்தை அமைக்க முடியாது என சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகம்  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பேட்டி. நகராட்சி ஆணையாளர்  (பொறுப்பு) மனோகரனிடம் கேட்டபோது, ‘பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அமைக்க   உள்ள இடம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது . நான் தற்போதுதான் பொறுப்பு  ஏற்றிருக்கிறேன். நிர்வாக குறைபாடுகள் உள்ளது. எனது உயரதிகாரிகளை கேட்காமல்  நான் எதுவும் கூற முடியாது. இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டுக்  கொள்ளுங்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

பேருந்து நிலைய மீட்புக்குழு: பேருந்து  நிலைய மீட்புக்குழு தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், ‘பேரணாம்பட்டு நகர  மக்களின் வரிப்பணத்தில் இயங்கி வரும் பேரணாம்பட்டு நகராட்சி பேருந்து  நிலையத்தை நகரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரக பகுதியில்  நகர மக்களின் கடும்எதிர்ப்பை மீறி மனைப்பிரிவு உரிமையாளர்களும்,  ஆளுங்கட்சியினரும் பயனடையும் வகையில் மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது.  மேலும் தற்போது அமைய உள்ள பேருந்து நிலைய முகப்பில் வீட்டுமனைகள் உள்ளன. அதை  தாண்டித்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லவேண்டும்.  ஆனால் முகப்பில்  உள்ள அணுகு சாலைக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறவில்லை. அங்கீகாரம் பெறவில்லை  என்றால் பேருந்து நிலையத்திற்கு எவ்வாறு செல்வது. அதேபோல் மனைப்பிரிவின்  பூங்கா இடத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒதுக்கி உள்ளனர். பேருந்து  நிலையத்திற்கு போதுமான இடம் இல்லாத நிலையில் பூங்காவுக்கான இடத்தையும்  பேருந்து நிலையத்தில் சேர்க்க முயல்கின்றனர். ஆனால் பூங்காவிற்காக  ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக்கூடாது என்று  விதி உள்ளது. இதுபோன்ற ஏகப்பட்ட விதி மீறல்கள் உள்ளன. மேற்படி பேருந்து  நிலையம் இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பொதுமக்கள்: பேரணாம்பட்டு  பேருந்து நிலையத்திற்கு அருகில் அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, தபால்  அலுவலகம், பஜார், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை இருப்பதால்  அனைத்திற்குமே வசதியாக உள்ளது. தற்போது பேருந்து நிலையம் அமைய உள்ள  இடத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. அதையும் மீறி ஊருக்கு வெளியில் பேருந்து  நிலையம் அமையுமானால் அது வாணியம்பாடி பேருந்து நிலையம் போல  பயன்பாடின்றிதான் இருக்கும் என்பதே பொதுமக்களின் கருத்து

Tags : bus station ,Rannampattu Central ,hub ,Rannampattu , 60 year,old bus, station, Rannampattu hub
× RELATED சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை...