×

சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தீவிரம்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு, குழி தோண்டும் பணி தொடங்கியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சியாக ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி தோண்டப்படுகிறது.

சுமார் 2 மணிநேரம் இந்த இயந்திரத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. ஒருங்கிணைப்பு பணி முடிவடைந்த நிலையில் தற்போது குழி தோண்டும் பணியை இயந்திரம் தொடங்கியுள்ளது. குழி தோண்டும் பணியில் 25 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை மணி நேரத்துக்குள் குழி தோண்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குழந்தையை மீட்க 3 பேர் தயார் :

கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்கவுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் 3 தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குழிக்குள் இறங்கவுள்ள 3 தீயணைப்பு வீரர்களுக்கும் தகுந்த ஆலோசனை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.


Tags : Excavation work , rig machine , recover Surjit
× RELATED குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில்...