×

ஹரியானா மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் 2-வது முறையாக நாளை பதவியேற்கிறார்: துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்பு

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மனோகர் லால் கட்டார் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக முதலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 10 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதனிடையே திடீர் திருப்பமாக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஜேஜேபியின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைத்தது. இதையடுத்து ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாகவும், அக்கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் அமித்ஷா அறிவித்தார். ஹரியானாவில் 2வது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், சண்டிகரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனோகர் லால் கட்டார் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக மனோகர் லால் கட்டார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தாங்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரப் போவதாக தெரிவித்தார்.

மாலையில் ஆளுநர் சத்தியதேவ் நரேன் ஆர்யாவை சந்தித்து மனோகர் லால் கட்டார் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தெரிகிறது. இதையடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 40 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் பாஜகவுக்கு, 10 ஜேஜேபி எம்.எல்.ஏக்கள், 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் சேர்த்து மொத்த 57 உறுப்பினர்களின் பலம் உள்ளது. முன்னதாக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான அனில் விஜ், ஹரியானாவில் அமையவுள்ள பாஜக அரசில் ஹரியானா லோகித் கட்சி தலைவர் கோபால் கந்தா இடம்பெற மாட்டார் என தெரிவித்தார்.

பாஜகவுக்கு ஆதரவளிக்க கோபால் கந்தா சுயேட்சைகளை ஒருங்கிணைப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் விமானத்தில் பயணித்த புகைப்படமும் வெளியானது. இதனால் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோபால் கந்தாவின் ஆதரவை நாடலாமா என பாஜகவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டெல்லியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுடன், ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதலா பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.வும் , ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளன என்றார். பா.ஜ.கவுக்கு முதலமைச்சர் பதவியும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படுமென அவர் கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக அரியானா ஆளுநரை 26-ஆம் தேதி அன்று சந்திக்க உள்ளதாக கூறினார். இந்த பேட்டியின் போது, துஷ்யந்சத் வுதாலாவும் உடன் இருந்தார்.

Tags : Chief Minister ,Manohar Lal Qatar ,Haryana , Haryana, Chief Minister, Manohar Lal Qatar, Deputy Chief Minister, Dushyant Chaudala
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...