×

7 சுயேச்சைகள் ஆதரவுடன் அரியானாவில் பாஜ ஆட்சி: கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று கூடுகிறது

புதுடெல்லி: அரியானாவில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைக்கிறது.  அரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும்  பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாஜ 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தொடங்கிய ஜனநாயக ஜனதா  கட்சி ( ஜேஜேபி) 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம், அரியானா லோகித் கட்சி தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும்  வெற்றி பெற்றன. இங்கு ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவை.
இதனால், தொங்கு பேரவை அமைந்ததால், சுயேச்சைகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜவும், காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டன.

மாநில பாஜ முதல்வரான மனோகர் லால் கட்டார், காங்கிரஸ் மாநில தலைவர் புபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் டெல்லி விரைந்து அவரவர் கட்சி தலைமைகளிடம் ஆலோசனை நடத்தினர். அதேசமயம், 7 சுயேச்சை எம்எல்ஏ.க்களையும் பாஜ  ரகசியமாக டெல்லிக்கு கொண்டு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், நேற்று சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் பாஜவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர். அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த அவர்கள்  தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏ.க்கள் ஆதரவை பெற்றதால் பாஜ அரியானாவில் ஆட்சி அமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி தலைவர் அனில் ஜெயின் அளித்த பேட்டியில், ‘‘சண்டிகரின் நாளை (இன்று) காலை 11 மணிக்கு கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. அதில் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் ஆட்சி  அமைக்க கவர்னரிடம் உரிமை கோர உள்ளோம்’’ என்றார். ஏற்கனவே கட்டார் தான் அடுத்த முதல்வர் என பாஜ தீர்மானித்து விட்டதால், இன்று நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் சம்பிரதாயத்திற்கு மட்டுமே என கூறப்படுகிறது.   எம்எல்ஏக்கள்  கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுச் செயலாளர் அருண் சிங் பங்கேற்கின்றனர். தீபாவளிக்குப் பிறகு கட்டார் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

துஷ்யந்துக்கு துணை முதல்வர் பதவி
அரியானா தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி, யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது ்அறிவிக்கப்படாமல் மவுனம் சாதிக்கப்பட்டது. எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி டெல்லி திகார்  சிறையில் உள்ள தனது தந்தை அஜய் சவுதாலாவை சந்தித்து துஷ்யந்த் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்,  ‘‘பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளுமே எங்களின் ஆதரவை கேட்க  வரவில்லை. எங்களின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை  நிறைவேற்ற தயாராக இருக்கும்  எந்த கட்சிக்கும் நாங்கள் ஆதரவு தர தயார். இரு கட்சிகளுமே எங்களுக்கு தீண்டத் தகாத கட்சிகள் அல்ல,’’ என்றார்.

இந்நிலையில், நேற்றிரவு டெல்லியில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை துஷ்யந்த் திடீரென சந்தித்துப் பேசினார். அவர் பாஜ.வுக்கு தனது ஆதரவை அறிவித்தார். புதிதாக அமையும் கட்டார் அமைச்சரவையில், இவருக்கு துணை முதல்வர்  பதவி அளிக்கப்பட உள்ளது.

சர்ச்சை எம்எல்ஏ ஆதரவால் பரபரப்பு
அரியானாவின் சர்ச்சைக்குரிய எம்எல்ஏவாக இருப்பவர் அரியானா லோகித் கட்சி தலைவர் கோபால் கண்டா. கடந்த 2012ல் கண்டா நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் விமான பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை  கண்டா பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. பலியான பெண்ணின் தாயும் தற்கொலை செய்து இறந்தார். இவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக கண்டா கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார்.  இவர் நேற்று முன் தினமே பாஜ எம்பி ஒருவரின் ஏற்பாட்டின் கீழ் டெல்லி விரைந்தார்.

அங்கு, 7 சுயேச்சைகளுடன் தானும் பாஜ கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இது சர்ச்சையாகி உள்ளது. கண்டாவின் ஆதரவுக்கு காங்கிரஸ் மட்டுமின்றி, பாஜ தலைவர் உமா பாரதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கண்டாவின் ஆதரவை பெறுவதால் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் அவப்பெயர் ஏற்படும் என உமாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பணம், அதிகாரத்தால் அமையும் ‘சட்டவிரோத’ அரசு
சுயேச்சைகளின் ஆதரவை பாஜ பெற்ற நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் சோனியா தலைமையில் காங்கிரஸ் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரியானாவில் பாஜ ஆட்சி அமைப்பது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘அரியானாவில் பாஜவை மக்கள் புறக்கணித்துள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்க எந்த  உரிமையும் இல்லை. பணத்தால் வசீகரித்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் ‘சட்டவிரோத’ அரசு அமைகிறது,’’ என்றார்.



Tags : Party MLAs ,BJP ,Haryana ,independents , 7 Independents support, Haryana, Bjp rule
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்