×

கருங்கல்பாளையம் சந்தையில் 95 % மாடுகள் விற்பனை

ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் 95 சதவீத மாடுகள் நேற்று விற்பனையானது. இதனால்,  வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

மாடுகளை தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வர். வாரந்தோறும் சராசரியாக ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனையாகும். இந்நிலையில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சந்தைக்கு மாடுகள் வரத்து தொடர்ந்து சரிந்தது. இதில், நேற்று நடந்த சந்தையில் 550 மாடுகளே விற்பனைக்கு வந்தது.

இது குறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், `தொடர் மழையின் காரணமாக, சந்தைக்கு இந்த வாரம் பசு 300, எருமை 100, கன்று 150 என 550 மாடுகளே விற்பனைக்கு வந்ததால் வரத்து பாதியாக குறைந்தது. தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின்கீழ் ஈரோடு அடுத்த உச்சாண்டாம்பாளையம், தென்காசி மாவட்டம் குற்றாலம், திருநெல்வேலி போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்நடை துறை அதிகாரிகளுடன் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.

மேலும், ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற மாநில வியாபாரிகள் வழக்கம் போல் மாடுகளை வாங்கி சென்றனர். இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில் 95 சதவீதம் விற்பனையாது. மழை காலம் முடியும் வரை மாடுகள் வரத்து குறைவாக தான் இருக்கும்’ என்றார்.


Tags : Merchants ,Karungalpalayam , Karunkalpalayam ,cows ,erode ,Checkpoints
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...