×

காரைக்காலில் டெங்கு காய்ச்சலால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 62 பேருக்கு டெங்கு அறிகுறி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் முழுவதும் 1000-க்கும் அதிகமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கோவை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வீடுகளிலோ அல்லது கடைகளிலோ டெங்கு கொசு வளர்வதற்கான சூழல் ஏதேனும் இருந்தால் அதன் உரிமையாளராரிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என பல்வேறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் விழிப்புணர்வோடு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே முழுமையாக காய்ச்சல் பாதிப்பை தடுக்க முடியும். காய்ச்சல் பாதிப்பு என்றால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரின் முழுமையான ஆலோசனைக்குப் பின்னரே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், மறுபுறம் டெங்கு, மர்மக்காய்ச்சல் போன்ற நோய்களையும் கொண்டு வந்து விடுகிறது. காரணம் சாலையோரங்களில் மழை நீர்தேங்குதல், கழிவுநீர் போன்றவற்றால் ஏற்படும் சுகாதாரக்கேடு தான். இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் 62 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டிலேயே இந்த மாதம் தான் காரைக்காலில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக நலவழித்துறை புள்ளிவிவரம் கூறுகிறது. காரைக்காலில் மாநகராட்சி சார்பாகவும், ரோட்டரி சங்கங்கள் சார்பாகவும் டெங்கு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி சுமார் 25 பேர் காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், மேலும் 62 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Karaikal , Karaikal, dengue fever, symptom
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...