×

ஹரியாணாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வர் பூபேந்தர் ஹூடா பேட்டி

சண்டிகர்: ஹரியாணாவில் காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வர் பூபேந்தர் ஹூடா தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினர்.

இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழலில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவியை துஷயந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் ஹூடா கூறியதாவது: ஹரியாணா மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டார்கள். 5 ஆண்டுகால ஆட்சியில் பெரும் இன்னலை சந்தித்த ஹரியாணா மக்கள் எதிர்க்கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்,  இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.


Tags : Bhupinder Hooda ,Chief Minister ,Congress ,Haryana. Haryana Congress , Haryana Congress, Alliance Governance, Forming, Former Chief Minister, Bhupinder Hooda
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு