×

டிஜிபி அலுவலகமும் தப்பவில்லை பாதுகாப்பு பணியில் இருந்த 7 போலீஸ்காரர்களுக்கு டெங்கு : மேலும் 10 பேர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு

சென்னை: தமிழக டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 7 போலீசார் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக தொடர் விடுமுறையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் கடந்த 2 மாதங்களாக அசுர வேகத்தில் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் 3,900 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மெரினா காமராஜர் சாலையில் உள்ள தமிழக டிஜிபி தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு பி பட்டாலியன் கம்பெனியை சேர்ந்த 7 போலீசார் டெங்கு காய்ச்சல் காரணமாக எழும்பூர் போலீஸ் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு பி பட்டாலியன் கம்பெனியை சேர்ந்த 10 பேர், மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர் விடுமுறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிஜிபி அலுவலகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் ஆய்வு செய்து பயன்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்தினர். தற்போது டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம், வழங்கப்பட்டு வருகிறது. டிஜிபி அலுவலக பராமரிப்பு பணியை தலைமையிடத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தான் கவனித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், குடியிருப்பு வளாகங்களில் பயன்படுத்தாமல் இருக்கும் டயர், தேங்காய் ஓடு உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அந்த சுற்றறிக்கையை போலீஸ் அதிகாரிகள் சரியாக கவனிக்காததால் தான் டிஜிபி அலுவலகத்தில் ஓரம்கட்டப்பட்ட பழைய கார் மற்றும் வேன்களில் மழைநீர் தேங்கி டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது.  இதன் காரணமாகவே, டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 7 காவலர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

இன்ஸ்பெக்டருக்கு டெங்கு காய்ச்சல்

சென்னை பிராட்வே, முத்தியால்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் அப்துல் காதர் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை பெற்றும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

10 ஆயிரம் அபராதம்?

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் டெங்கு காயச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த பழைய பொருட்களை அகற்றினர். ஆனால் சென்னை மாநகராட்சி விதிப்படி கொசு உற்பத்தியாகும் இடங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை விதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விதிப்படி அரசு அலுவலகங்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

Tags : policemen ,DGP , Dengue, 7 more policemen , DGP office
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்