×

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகள் நிறுத்தம்: விரைந்து முடிக்க இளைஞர்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த விளையாட்டு மைதான கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கு ரூ1,415 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரான சாலை போக்குவரத்து, ஸ்மார்ட் சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்தம், கண்காணிப்பு கேமராக்கள், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை அரங்குகள், வரலாற்று நினைவிடங்களை பாதுகாத்தல், சுற்றுலா மேம்பாடு செய்தல், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக அடுக்குமாடி கார் பார்க்கிங், புதிய பஸ் நிலையம் விரிவாக்கம் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் கஸ்பா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், டென்னீஸ், இறகு பந்து, ஓடுதளம், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கான புல்வெளி மைதானம் ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்கத்தில் வேகமெடுத்து மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக மைதானம் அமைக்கப்படும் என்கிற தகவலை அறிந்து இளைஞர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தோம். கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பணிகள் ஆமை வேகமாக நடந்து வரும் நிலையில், விளையாட்டு மைதான கட்டுமான பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே, இளைஞர்கள் பயன்பெறும் வகையில், விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Vellore ,Smart , Vellore, Smart City Project, Playground,
× RELATED ஆன்லைன் முறையில் தணிக்கை: மின்வாரியம் புதிய திட்டம்