×

தமிழகத்திற்கு கூடுதல் யூரியா உரம் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி

டெல்லி: தமிழகத்துக்கு கூடுதல் யூரியா உரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக தேவைப்படும் 1.40 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை  விரைந்து வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.  பருவமழை பெய்துவரும் நிலையில், விவசாயிகளின் நலனுக்காக கூடுதல் உரம் தேவை என முதல்வர் பழனிசாமியின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அது தொடர்பாக,  மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை அதிமுக எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பின், தமிழக  அரசின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் உரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். டி.கல்லுப்பட்டி, சேடபட்டி யூனியனுக்குட்பட்ட சந்தையூர், மேலபட்டி, லட்சுமிபுரம், கீழபட்டி, சாப்டூர், அத்திபட்டி, வண்டாரி, குடிசேரியில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சோளம், மக்காச்சோளம், கம்பு, பருத்தி பயிரிட்டுள்ளனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் யூரியா உரம் பெறுவது வழக்கம். தற்போது உரம் கிடைப்பதில்லை. தனியார் உரக்கடைகளிலும் யூரியா தட்டுப்பாடு உள்ளதால் கூடுதல் விலைக்கு விவசாயிகள் வாங்குகின்றனர். யூரியா ஒரு மூடை ரூ.295-க்கு விற்க வேண்டும். ஆனால் ரூ.400க்கு விற்கின்றனர். இப்பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் யூரியா உரம் தட்டுப்பாடின்றி வினியோகிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sadananda Gowda ,Tamil Nadu , Additional Urea fertilizer will be supplied to Tamil Nadu
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...