×

மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படுவதால் அரசு பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

தொண்டி: தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படுகிறது. அதனால் உடனடியாக கூடுதலாக ஆசிரியர் நியமிக்க கோரி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் ஒற்றை இலக்கு உள்ள பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலையில் இங்கும் இந்நிலை தொடர்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக போராடியும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதேபோல் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பொது தேர்வை எப்படி எதிர் கொள்வது என்ற நிலையில் மாணவிகள் உள்ளனர். கல்வி துறையில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்து அமைச்சகம் முதலில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் அஹமது பாய்ஸ், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் மண்டலம் ஜெயினுலாப்தீன் கூறுகையில், ‘‘பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என இரண்டு வருடங்களாக போராடி வருகிறோம். பல்வேறு கட்டங்களாக அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து விட்டோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் நேற்று மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்’’ என்றனர்.

Tags : government schools ,teachers ,ability teachers , teachers
× RELATED 10 ஆண்டாக அரசு பள்ளிகளில் பணியாற்றும்...