×

இளம்பெண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடு பலாத்கார வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: பொதுநல மனுவாக தாயின் கடிதம் ஏற்பு

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘‘என் கணவர் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் மகள் தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்தார். ஜவுளி கடைக்காரரின் நண்பர் என் மகளை தீபாவளியன்று கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அதன்பின் என் மகள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் போலீசார் வேறு யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சமுதாயத்தில் அதிக செல்வாக்கு பெற்றவர்கள்.

இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். என் மகள் பாதிக்கப்பட்டதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டியது அவசியம். எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த கடிதத்தையே பொதுநல மனுவாக ஏற்று பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் துவக்கம் முதலே போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் இருந்து, திருச்சி சரக சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. இன்ஸ்பெக்டர் தகுதிக்கு குறையாத ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து, ஆரம்பம் முதல் புதிதாக விசாரிக்க வேண்டும். 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து  கும்பகோணம் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ₹2 லட்சத்துடன் சேர்த்து மேலும் ₹3 லட்சம் இழப்பீடு அரசு தரப்பில் வழங்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு நீதிமன்ற வழக்கு விசாரணை முடியும் வரை தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.  இந்த வழக்கில் குற்றவாளிகளான கார்த்திக் மற்றும் சின்னப்பாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : transfer ,CBCID CID , Adolescent, rape case, CBCID
× RELATED முதல்வர் எடப்பாடி அறிவிப்பு நிவர்...