×

கொலை, கொள்ளை, கற்பழிப்புதான் சாதனை அதிமுகவின் அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராட்டம்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

விழுப்புரம்: கொலை, கொள்ளை, கற்பழிப்புதான் சாதனை என்று இருக்கிற அதிமுகவின் அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்ெடடுக்க போராடி வருகிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விக்கிரவாண்டியில் இறுதிகட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி தலைமையிலான, மன்னிக்கவும் எடுபுடி என்று சொல்ல வேண்டும். தனிப்பட்டவர் என்பதால் சொல்லவில்லை, தமிழகத்தின் முதல்வர் என்பதால் கூறுகிறேன். மத்திய அரசிடம் இருந்து எந்த உத்தரவு வந்தாலும், அவர்கள் நினைப்பதை அப்படியே செயல்படுத்துகிற முதல்வர். மாநில உரிமைகள் பறிப்பு, சுயமரியாதை பறிப்பு இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாயைபொத்தி, கையை கட்டி அடிமை ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் புதுச்சேரி காமராஜ்நகர், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி, ராதாபுரத்திலும் வெற்றி பெற்றோம் என்ற செய்தி விரைவில் வரவிருப்பது உறுதி. தமிழகத்தில் ஆட்சியா நடக்கிறது. முதல்வர் இருக்கிறாரா? அமைச்சர்கள் அவருக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறார்களா? கோட்டையிலிருந்து  கொள்ளை ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களை 2 பிரிவாக பிரிக்கலாம். ஒன்று ஊழல்வாதிகள், மற்றொன்று உதவாக்கரைகள் என பிரிக்கலாம். 8 ஆண்டு அதிமுக ஆட்சியில் எதைச்செய்தார்கள். தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச்சென்றுள்ளது. அதனை மீட்டெடுக்கத்தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் வேதனைகள்தான் சாதனையாக உள்ளது.

அரசால் தடைசெய்யப்பட்ட குட்காபவுடர் அனைத்துகடைகளிலும், பெட்டிக்கடைகள், வெற்றிலைபாக்கு விற்கும் கடைகள், பள்ளி, கல்லூரி முன்புள்ள கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் நடப்பதுதான் அதிமுக ஆட்சியின் சாதனையா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை மக்களிடம் தெளிவாக புரிய வைத்துள்ளேன். இதனை முதல்வர் திட்டமிட்டு திசைதிருப்பி வருகிறார். ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் திமுகதான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் பேசிவருகிறார்கள். 1996ம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. வழக்கு போட்டது திமுகவா இல்லை. சுப்ரமணியசாமியால் போடப்பட்டு பலஆண்டுகள் வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை மூடிமறைக்க முதல்வர் பொய் சொல்லிவருகிறார். பொதுமக்கள் சிந்திக்கவேண்டும்.

ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததே? இதனை நான் பேசினால் சிலரது பெயரைச் சொல்லக்கூடும். இதனால் கொடநாடு சம்பவத்தை பேசக்கூடாது என சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடை ஆணை பெற்றுள்ளீர்களே? நான் சொல்லாவிட்டால் அவர் பெயர் யாரென்று மக்களுக்கு தெரியாதா? நான் சொல்லிதான் தெரியவேண்டுமா? பொள்ளாச்சியில் 250 இளம்பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் பறித்தார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளாக இது நடந்துவருகிறது. காவல்துறைக்கு இது தெரியாதா? அங்கு வசிக்கும் பெண்கள் பொள்ளாச்சி என்று கூறவே தயங்குகிறார்கள். அந்தளவிற்கு கொடுமையான ஆட்சி நடக்கிறது.
இந்த ஆட்சிக்குதான் ஐஎஸ்ஐ முத்திரை வழங்க வேண்டுமா? தூத்துக்குடியில் 11 பேரை குருவிகளைப்போல் சுட்டுக்கொலை செய்தார்களே? இதற்குதான் ஐஎஸ்ஐ முத்திரை வழங்க வேண்டுமா?

அதிமுகவினர் வைத்த பேனரால் சென்னையில் சுபஸ்ரீ, கோவையில் ரவி இறந்து போனார்கள். அவர்கள் வீட்டிற்கு அதிமுகவினர், அமைச்சர்கள் சென்று ஆறுதல் கூறினார்களா? முதலமைச்சர் இரங்கலாவது தெரிவித்தாரா? நீட் தேர்வினால் தமிழகத்தில் 7 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நீட்தேர்வை எதிர்த்து தமிழக அரசு 2 முறை சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அது இன்று எந்தநிலையில் இருக்கிறது என்று இவர்களால் கேட்க முடியுமா? திமுக ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிரணியில் அதிமுகவோடு கூட்டணியில் இருக்கும் பாமக, அதிமுகவுக்கு ஊதுகுழலாக இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் 18 ஊழல் பட்டியல்கள், 24 புகார் மனுக்களை அக்கட்சியின் இளைஞரணி அன்புமணி கவர்னரிடம் வழங்கினார். அவர் அளித்த மனுவில் சிலவற்றை கூறுகிறேன். ரூ.7 லட்சம் கோடி ஆற்றுமணல் ஊழல், ரூ.2 லட்சம் கோடி தாது மணல் ஊழல், கிரானைட் ஊழல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்வதில் ஊழல், வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல், ஏன்?. குப்பையில் ஊழல் செய்தது அதிமுக ஆட்சி என்று கூறியிருந்தார்கள். அசுரன் படம் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். பஞ்சமி நிலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. கதை சிறப்பாக இருந்ததால் வாழ்த்து தெரிவித்தேன். இதனை தாங்கிக்கொள்ள முடியாத ராமதாஸ், முரசொலி பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது என்று கூறினார். நான் இதற்கு பட்டாவை காண்பித்து விளக்கமளித்துள்ளேன். அதற்கு மூல பட்டா எங்கு என்று கேட்டிருக்கிறார்கள். பஞ்சமி நிலம்தான் என்று நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் அரசியலைவிட்டு விலகத்தயாரா? இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Murder ,robbery ,rape ,Tamil Nadu ,speech ,rest ,Aam Aadmi Party ,MK Stalin ,AWA , The Awala regime of the DMK, MK Stalin
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு