×

தூர்வாரும் பணிகளில் கோட்டை விட்ட அரசு

* குறட்டை விடும் குடிமராமத்து
* வெள்ள பயத்தில் மக்கள்
* தொடங்கியது வடகிழக்கு பருவமழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும்  கால்வாய்களை தூர்வாரும் பணியை உரிய காலத்தில் முடிக்காத காரணத்தால்  மீண்டும் பெரும் வெள்ளம் வந்து விடுமோ என்ற பயத்தில் பொது மக்கள்  வாழ்ந்துவருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 1,894 கி.மீ. நீளத்திற்கு 7,351 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்களை பராமரித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு  468 இடங்களில் ₹440 கோடியில் மதிப்பீட்டில் 155.49கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு 1,636 கிலோ மீட்டர் நீளமுள்ள 7,365 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், 3,598 இடங்களில் சிறு பராமரிப்பு பணிகளும், 10,346 மனித நுழைவு வாயில்கள் சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்டறியப்பட்டது.

இதன்படி மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரினால் சுமார் 3,22,809 கியூபிக் மீட்டர் வண்டல்கள் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் கடந்த 15ம் தேதி வரை  98,000 கியூபிக் மீட்டர் வண்டல்கள் மட்டுமே தூர்வாரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து  கடந்த 18ம் தேதிக்குள் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை 65 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் பல  இடங்களில் பாதியில் இப்போதுதான் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இததைப்போன்று பொதுப்பணித்துறையும் 60 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ளது. சென்னையில் அடையாறு, பக்கிங்காம், கூவம் உள்ளிட்ட கால்வாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ₹7.65 கோடி தமிழக அரசு நிதி  ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கு டெண்டர் எடுத்த நிறுவனங்கள் 10 நாட்களுக்கு முன்பு தான் பணிகளை தொடங்கியது. இவற்றில் ஒரு சில நிறுவனங்களிடம் தேவையான இயந்திரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின்கீழ், 1,945 ஏரிகள் உள்ளன. 1,895 குளங்களும் உள்ளன. மேலும், 25,658 கிணறுகள் உள்ளன. தமிழக அரசின், குடிமராமத்து திட்டத்தின்கீழ், 2019 - 20ம் நிதி ஆண்டிற்கு, திருவள்ளூர் மாவட்டத்தின் நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க, ஆரணியாறு வடிநில கோட்டத்தின் 30 ஏரிகளை புனரமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி, ₹10.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பணிகள் நடைபெறும் பகுதியில் விவசாய குழுக்கள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. விவசாய குழுக்களில் அதிமுகவை சேர்ந்த விவசாயிகளை சேர்த்தால் மட்டுமே பணம் பார்க்க முடியும் என்பதால், ஆளும்கட்சி விவசாயிகளை அதிமுக எம்எல்ஏக்கள் சேர்த்தனர். ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் மெத்தனத்தால், ஏரிகளில் குடிமராமத்து பணிகள் அரைகுறையாகவே உள்ளது. மேலும் அரசு மண் குவாரி இயங்கிய சேலை ஏரி, ஏகாட்டூர் ஏரி, கூவம் ஏரி, கசவநல்லாத்தூர் ஏரி, வேப்பஞ்செட்டி ஏரி, திருப்பாச்சூர் இஷா ஏரி, பட்டறைபெரும்புதூர் ஏரி உட்பட பல ஏரிகள் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது. இவற்றில் 15 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டி, மண் வெட்டி எடுக்கப்பட்டதால், சமமாக இருந்த ஏரியின் நீர்பிடிப்பு நிலப்பகுதிகள், சிறு குட்டையாக கிடக்கின்றன. அதனால், மழைக்காலத்தில் ஏரிக்குள் வரும் மழைநீர், குட்டை குட்டையாக தேங்கி கிடக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியதும் சிறியதுமாக 1942 ஏரிகள் உள்ளன.  இவற்றில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 912 ஏரிகளும்,  ஒன்றிய ஊராட்சிகளின் பராமரிப்பில், 1103 ஏரிகளும் உள்ளன. இவற்றில் பல ஏரிகள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதிமுக அரசு இதைப்பற்றி  சிறிதும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் சிறிய மழை பெய்தாலும் மாவட்டத்தில் பல ஏரிகளில் நிரம்பி விடுவதாகவும், ஆனால் கொள்ளளவு குறைந்து போனதால், குறைந்த காலத்துக்கு மட்டுமே விவசாயத்துக்கு பயன்படுத்த முடிகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3  மாவட்டங்கள்  பருமழையால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்கள் ஆகும். இதற்கு   எடுத்துக்காட்டு 2015ம் ஆண்டு பெய்த கனமழை. இதனால் சென்னையின் பெரும்பாலான   பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதேப் போன்று சென்னை புறநகர் பகுதிகளும்   வெள்ளக்காடானது. இந்நிலையில் மீண்டும் வெள்ளம் வந்து விடுமோ  என்ற அச்சப்படும் வகையில் தான்  அரசின் தூர்வாரும் பணிகள் இருப்பதாக பொதுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புகார் அளிக்க
மாநகராட்சி ஆணையர்  
தொலைபேசி எண்: 044-25381330

மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம்
தொலைபேசி எண்: 044-27238433
மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர்
தொலைபேசி எண்: 044-27661600

Tags : Govt. Govt , Govt
× RELATED லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபாதை அமைக்கும் பணி