×

இன்று (அக். 19) சர்வதேச தொல்லியல் நாள் கீழடி தந்த புதிய விழிப்புணர்வு

மதுரை : மனித நாகரிகத்தை அறியச் செய்யும் தொல்லியலை போற்றும் வகையில், இன்று (அக். 19) சர்வதேச தொல்லியல் நாள் கொண்டாடப்படுகிறது. கீழடி அகழாய்வுக்குப் பிறகு, தமிழகத்தில் சாதாரண மனிதர்களிடமும் தொல்லியல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்களிடம் தொல்லியல் ஆய்வுகள், பாரம்பரியச் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச தொல்லியல் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கீழடி அகழாய்வுக்குப் பின் பொதுமக்களிடம் தொல்லியல் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே இம்மாதம் முழுவதும் தொல்லியல் சார்ந்த இடங்களைப் பார்வையிடுதல், சுத்தம் செய்தல், கருத்தரங்கங்கள், கல்வெட்டு பயிற்சிகள் போன்றவற்றை அரசும், அரசு சாரா அமைப்புகளும் நடத்தி இதை கொண்டாடலாம். இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்பொருள்கள், செப்பேடுகள், வெளிநாட்டவர் குறிப்புகள், வாய்மொழி வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் வரலாறு எழுதப்படுகிறது. வரலாற்றை எழுத உதவும் ஒரு சான்றாக தொல்லியல் உள்ளது. தொல்லியலில் மிக முக்கியமானது அகழாய்வு ஆகும்.

இதன் மூலமே பல தொல்லியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. பரவலாகத் தோண்டும் வகை, ஆழத்தோண்டும் முறை, சுற்றகழாய்வு, நீள்குழி அகழாய்வு, குகை அகழாய்வு, சவக்குழி அகழாய்வு, நீருக்கடியில் அகழாய்வு என பல வகைகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. அகழாய்வு மூலம் தான் சிந்துவெளி நாகரிகம், கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கரூர், திருக்கோவிலூர், பல்லாவரம், அத்திரம்பாக்கம், சித்தன்னவாசல், பழநி, அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய இடங்களின் பழமை வெளிஉலகிற்கு தெரியவந்தது.

அதேபோல் செப்புக்காலப் பண்பாடு, கங்கை, யமுனை நதிப்பள்ளத்தாக்கில் நிலவிய வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு, மத்திய இந்தியா, வட தக்காணம், ராஜஸ்தான், தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் நிலவிய புதிய கற்கால செப்புக்காலப் பண்பாடு ஆகியவற்றையும் அறிய முடிந்தது. பண்டைய மனிதன் இறந்தோரைப் புதைக்கும் விதம், நடுகற்கள் அமைத்த விதம் ஆகியவற்றையும் தொல்லியல் மூலம் அறியலாம். தமிழகத்தின் அகழாய்வுகள் மூலம் சங்ககாலத்தில் ரோம் நாட்டுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகத்தொடர்பையும் அறிய முடிகிறது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறும்போது, ‘‘அடுத்த தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில்கள், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இத்தகைய மரபுசார் சின்னங்களை நேரில் பார்த்து போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மை வளர்க்கப்படவேண்டும். இம்மாதம் முழுவதும் தொல்லியல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை நடத்த திட்டமிடலாம்’’ என்றார்.

Tags : Keeladi , Keeladi , madurai,Archeology Day ,Awareness
× RELATED கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியதை...