வறுமையிலும் படிப்பில் ஆர்வம் காட்டிய மாணவி மேல்படிப்பை தொடர தேடி வந்த உதவித்தொகை

சென்னை: வறுமையிலும் படிப்பை தொடர வேண்டும் என்று ஆர்வம் காட்டிய மாணவிக்கு, கனடாவில் செயல்பட்டு வரும் அமைப்பில் இருந்து மேற்படிப்பை தொடர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரியாவுக்கு சிம்கா (காமன்வெல்த் எஜுகேஷனல் மீடியா சென்டர் பார் ஏசியா) விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எஸ்சி ஐடி படிப்பை அவர் தொடர உள்ளார்.

இதுதொடர்பாக, மாணவி பிரியா கூறியதாவது: நான் திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவள். விவசாய குடும்பத்தில் பிறந்ததால் வறுமை காரணமாக, பிளஸ்2க்கு பிறகு படிப்பை தொடர முடியவில்லை. கோவை கே.பி.ஆர் மில் நிறுவனத்தில் எங்கள் ஊருக்கு வந்து வேலைக்கு ஆள்தேர்வு செய்த போது, வேலை வழங்குவதோடு, படிக்க வைப்பதாக சொன்னார்கள்.

பிளஸ்2 தேர்வில் நான் 915 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதை தொடர்ந்து பி.சி.ஏ சேர்ந்து தற்போது முதலிடம் பெற்றுள்ளேன். அதற்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. என்னை போல் ஏராளமானோரை நான் வேலை செய்யும் நிறுவனம் சார்பாக படிக்க வைக்கிறார்கள். பிளஸ்2 மதிப்பெண், என்னுடைய குடும்ப சூழ்நிலை, பி.சி.ஏ.விலும் சிறப்பாக படிப்பதை கருத்தில் கொண்டு கனடாவில்  செயல்பட்டு வரும் சிம்கா நிறுவனம் எம்.எஸ்சி ஐடி படிக்க சேர்வதற்கு 25 ஆயிரம்  உதவித்தொகையும், ஊக்கப்படுத்த பாராட்டு சான்றிதழையும் வழங்கியுள்ளது. நான்  எம்.எஸ்சி படித்தபின் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும்  என்பது லட்சியம். இவ்வாறு மாணவி பிரியா கூறினார்.

Related Stories:

>