×

இன்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு நாள் தோல்வியில் வெற்றியை கண்டால் வாழ்வு ஒளிரும்

‘‘டேய்... நீ எல்லாம் அதுக்கு லாயக்குப்பட மாட்டே...’’ என்று கூறப்பட்ட ஒரு சிறுவன், உலகில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு விஞ்ஞானியாக, மாமேதையாக உருவாகி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்றால் நீங்கள் நம்பித்தானே ஆக வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் 1847, பிப்.11ம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மிலன் எனும் நகரில் சாமுவேல் - நான்சி தம்பதிக்கு ஏழாவது, கடைசி மகனாக பிறந்தார். ஆனால், மற்ற பிள்ளைகள் போல எடிசனின் செயல்பாடுகள் இல்லை.

 4 வயது வரை பேச்சே வரவில்லை. 7 வயதில் பள்ளியில் சேர்த்தபோது, இவரை தேறாத கேஸ் என்றுதான் ஆசிரியரே எண்ணினார். கவனக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெயரை கேட்டால் கூட உடனே சொல்லத்தெரியாத மறதி நோயும் இவரை ஆககிரமித்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு சிறுவன் உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளை பெற்று சாதிக்க முடிகிறது என்றால், அது தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மட்டுமே சாத்தியம். எதையுமே உடனே ஏற்றுக்கொள்ளாதவர் எடிசன். இது எப்படி உருவானது? ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? மாற்றிச்செய்யலாமே? என கேட்டுக் கொண்டே இருப்பார்.

எதிராளி பதில் சொல்லியே டயர்டாயிடுவாராம். எந்த விஷயத்தையும் ஆராயாமல் நம்ப மாட்டார். மேலும், எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த கருவியை, ஏழை, எளிய மக்கள் கூட வாங்கக்கூடிய விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ரசாயனம் மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தானே புத்தகங்களைப் பார்த்து, வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

அதற்கு தேவையான பொருட்களை வாங்க பணம் அதிகம் தேவைப்பட்டது. எனவே ரயில் வண்டியில் பத்திரிகை விற்க அனுமதி பெற்றார். ரயிலில் சரக்கு பெட்டி ஒன்றினில் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். ஆனால் ஒரு முறை பாஸ்பரஸ் தவறியதில் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது, எடிசனை ரயில் பொறுப்பாளர் கன்னத்தில் அறைய, ஏற்கனவே காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு செவிப்புலன் பாதிப்புற்று இருந்ததால் இவருக்குக் காது இன்னும் மோசமாகி விட்டது.

தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது 22ம் வயதில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. தொடர்ந்து கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்விளக்கு, மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என எக்கச்சக்க சாதனங்கள் செய்து இவரே அதைப் பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் துவங்கினார். போனோகிராப்புக்காக மட்டும் 65 காப்புரிமைகள் பெற்றுள்ளார்.               
 
கிட்டத்தட்ட 5,000த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை, கண்டுபிடிக்கும் முன் 50,000 பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார்.ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். - அதுதான் தாமஸ் ஆல்வா எடிசன்.  தோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா?

Tags : defeat ,Thomas Alva Edison Memorial Day ,Thomas Alwa Ediosn Memorial Day: A Man Who Failed Failure ,Stepping Stone of Success , October 18,Thomas Alwa Ediosn,Failure ,Success
× RELATED பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது;...