×

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருநாள் மழைக்கே கழிவுநீர் தேக்கம்: வியாபாரிகள், தொழிலாளர்கள் அவதி

அண்ணாநகர்: சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளுடன் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு தொற்றுநோய் பரவும் பீதியில் சுமை தூக்கும் தொழிலாளர்களும், வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர்.ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிதாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம், காய்கறி, பூக்கள் என அனைத்து கடைகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து விதமான காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நடைபெறுவதால், நாள்தோறும் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் ஏராளமான லாரிகள் மூலம் சரக்குகள் வந்து சேருவதால், மார்க்கெட்டை சுற்றிலும் காய்கறி, பழம் மற்றும் பூக்களின் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கும். இதில் மழை பெய்யும்போது, அவை கழிவுகளாக உருமாறி, கொசுக்களின் உற்பத்தி கூடமாக உருமாறி காணப்படும்.

இந்நிலையில் சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட திறந்தநிலை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்க்கெட் பகுதிகளில் குவிந்துள்ள குப்பை கழிவுகளில் மழைநீர் தேங்கியது. அவை நேற்று காலை கழிவுநீராக உருமாறி அப்பகுதி முழுவதும் பரவி தேங்கியுள்ளது. இதனால் அங்கு டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு தொற்றுநோய் மற்றும் மர்ம காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்ல பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த குப்பை கழிவுகளை அகற்றி, கால்வாய்களை சீரமைத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகள் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Coimbatore ,Traders ,Coimbatore Market Sewerage Stagnation in the Rain One Day , Coimbatore Market, Sewerage stagnation, rain,traders, workers
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்