×

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிவறைகள் மூடல்: பயணிகள் அவதி

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டண கழிவறைகள் திடீரென மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு, சேலம் மற்றும் அண்டை மாநில நகரமான திருப்பதிக்கு சுமார் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மூலமாக பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். 24 மணிநேரம் பஸ் போக்குவரத்து உள்ளதால் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். மாநகராட்சி சார்பில் பயணிகள் வசதிக்கென ஓய்வு அறை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசும் அவல நிலையில் காணப்பட்டது. கடந்த மாதம் 23ம்தேதி தேசிய துப்புரவு பணி நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அருகே உள்ள 2 கழிவறைகள் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனைக் கண்ட அவர், தூய்மைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதனை ஏற்று கடந்த சில நாட்களாக கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக 2 கழிவறைகளும் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள 2 கழிவறைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஸ் நிலையத்தில் காலியாக உள்ள இடத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் பஸ் நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றத்துடன் தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவல நிலை உள்ளது. பஸ் நிலையத்தில் ஆங்கேங்கே மழைநீர் தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உள்ளதால் டெங்கு நோய் பாதிப்பு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைகின்றனர். அதேபோல் மாநகராட்சி சார்பில் வழங்க வேண்டிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கிடைக்கவில்லை. எனவே, பயணிகள் நலனை முன்வைத்து மூடப்பட்டுள்ள கழிவறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Vellore ,bus station ,Avi ,Vellore New Bus Stand Closure , Vellore, New Bus Stand, Fare Toilets, Tourists
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்