×

கோவை மாவட்டத்தில் இளைஞர்களைக் கத்தியால் குத்தி 30 லட்சம் ரூபாயை பறித்த வழக்கு: 10 பேரிடம் போலீசார் விசாரணை

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, இளைஞர்களைக் கத்தியால் குத்தி 30 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற வழக்கில் பைனான்சியர் உள்பட 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று முன் தினம் இரவு இரு இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தபடி, கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவ்வழியாகச் சென்ற சிலர், இரு இளைஞர்களையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அந்த இருவரும் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் சுங்கத்தைச் சேர்ந்த ராகுல்குமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிலை விரிவுபடுத்துவதற்காக, திருப்பூரைச் சேர்ந்த பைனான்சியர் பிரபாகரன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி வந்ததாகவும், அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், தங்களைக் கத்தியால் குத்தி பையை பறித்துச் சென்றனர் என்று கூறியதால்  விசாரணை தீவிரம் அடைந்தது. முதற்கட்டமாக பிரபாகரனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 50 லட்சம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி, அந்த இரு இளைஞர்களிடமும் பிரபாகரன், புராசெசிங் கட்டணம் என்ற பெயரில் இரண்டரை லட்சம் ரூபாய் வாங்கி இருப்பது அம்பலமானது. இரண்டரை லட்சம் ரூபாய்க்காக ராகுல் குமார் என்ற இளைஞர், வேறொரு பைனான்சியரிடம் சொத்துப் பத்திரத்தை அடமானம் வைத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிரபாகரன் முதலில் காசோலை கொடுக்கவே அது பணம் இல்லை என்று திரும்ப வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, பூட்டப்பட்ட ஒரு பையை, அந்த இளைஞர்களிடம் கொடுத்த பிரபாகரன், அதற்குள் 30 லட்சம் ரூபாய் பணமும், 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கடன் ஆவணங்களும் இருப்பதாகக் கூறியுள்ளார். பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்படும்படியும், அங்கு சென்ற பின்னர், தமது உதவியாளர் வந்து திறந்து கொடுப்பார் என்றும் பிரபாகரன் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதை அடுத்து அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், இளைஞர்களிடம் இருந்து பை பறிக்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். பிரபாகரனே பணத்தைக் கொடுத்து விட்டு, பின்னர் ஆட்களை அனுப்பி பறித்து வரச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர் உள்பட 10 பேரிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : district youth ,knife stabbing ,Coimbatore ,persons , youth, knife stabbing, Rs 30 lakh, extortion case, 10 persons, police
× RELATED நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது