×

குரோம்பேட்டை புதுவை நகரில் சாலையில் விடப்படும் ஓட்டல் கழிவு: சுகாதார கேட்டில் தவிக்கும் மக்கள்

தாம்பரம்,: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விதிமீறி அருகில் உள்ள புதுவை நகர் சாலையில் விடப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புதுவை நகர், 2வது தெருவில் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீர் வழிந்தோடி, அங்குள்ள குடிநீர் பம்பு அருகே தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் குடிநீர் பம்பில் இருந்து தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து, சாலையில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Chrompet ,Puduvai , Chrompet, Road, Hotel Waste
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...