×

சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு,..ஆஞ்சநேயர் படத்துடன் அரசு விரைவு பஸ் இயக்கம்

மதுரை: ஆஞ்சநேயர் உருவ படத்துடன் அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு விரைவு ஏசி பஸ் திருநெல்வேலி மாவட்டம்,  செங்கோட்டையிலிருந்து கிளம்பியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மதுரை வழியாக நேற்று காலை சென்னை சென்றடைந்தது. இந்த பஸ்சின், பக்கவாட்டு கண்ணாடியில் ஆஞ்சநேயர் படம் ஒட்டப்பட்டு, ‘ஜெய் ஹனுமான்’ என்ற  வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. அனைத்து சமூகத்தவரும் பயணிக்கும் அரசு பஸ்சில், ஒரு குறிப்பிட்ட மதச்சார்பு படங்களை ஒட்டுவது ஆரோக்கியமானதல்ல என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும்  இந்த பஸ் படம் வெளியிடப்பட்டு, வைரலாக பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.
      
இதுகுறித்து போக்குவரத்து கழக தொமுச மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறும்போது, ‘‘ஏற்கனவே பஸ்களில்,  கண்ணாடிகளில் எந்த பதிவுகளையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவுகள் உள்ளன. ஆனால், அதிகாரிகளே  இந்த பஸ்சில் உருவத்தை ஒட்டி வைத்திருக்கின்றனர். இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதுடன், அனைவருக்கும் பொதுவானபஸ்களில் இனியும் இதுபோன்ற படங்கள், சின்னங்கள், வாசகங்கள் இடம் பெறுவதை தவிர்ப்பது அவசியம்’’ என்றார்.
அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ அக்.14 காலையில் சென்னைக்கு இந்த ஏசி பஸ் வந்ததுமே, இதுகுறித்த தகவலை ஓட்டுநர், நடத்துனரும் தெரிவித்தனர். இதன்பேரில் பஸ்சில் ஒட்டி இருந்த படம்  அகற்றப்பட்டிருக்கிறது. வேறு பஸ்களில் இதுபோன்ற படங்கள் இருப்பினும் அது குறித்தும் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Social websites, anglers, government quick bus
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...