×

சொந்தமாக வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்: கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் கலெக்டர் தகவல்

வேலூர்: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக இவ்வாறு தடுப்பூசி போடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வேலூர் அடுத்த அகமேடு கிராமத்தில் இன்று காலை தொடங்கியது. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் அந்துவன், திருமூலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசியதாவது: வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரம் கால்நடைகள் உள்ளன.

கோமாரி நோய் கால்நடைகளின் வாய் மற்றும் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டு பெரும் வலியுடன் கூடிய பாதிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கிய கால்நடைகள் உணவு உட்கொள்ளாது. இதனால் பால் உற்பத்தி பாதிக்கும். இன்றைக்கு விவசாயத் தொழிலில் வருமானம் இல்லை. கால்நடைகள்தான் விவசாய குடும்பங்களின் பொருளாதாரத்தை சமாளித்து வருகிறது. எனவே, கால்நடைகளை நாம் பாதுகாக்க வேண்டும். சினைமாடுகள், கறவைமாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை போடலாம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 பிளாக்குகளில் வரும் நவம்பர் மாதம் 12ம்தேதி வரை இந்த தடுப்பூசி போடப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இன்று காலை நடந்த கோமாரி தடுப்பூசி முகாமில் 400 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு அளித்தனர். மனுவை பெற்று கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் கழிவுநீர் கால்வாய், சீரான சாலை அமைத்துதர வேண்டும் என்றனர்.

துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். அப்போது, விவசாயி ஒருவர் பசுமாடு இறந்ததற்கான இழப்பீட்டு வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் தாமதிப்பதாக கூறினார்.  கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் நிலுவை குறித்த விவரங்களை சேகரித்து அந்த தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்கள் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு விண்ணப்பித்தால் அரசு நிலம் வழங்கப்பட்டு வீடு கட்டித்தரப்படும், என்றார்.

அதைத்தொடர்ந்து, தடுப்பூசி முகாமிற்கு வந்திருந்த வேளாண் கல்லூரி மாணவிகளிடம் விவசாய நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து, எந்த வகையான பயிர் செய்ய வேண்டும், தேவைக்கு ஏற்ப ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். அப்போது பொதுமக்கள் 20 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக இந்த கிராமத்திற்கு கலெக்டர் வந்தது பெருமையாக உள்ளது, என்று கூறி கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது கலெக்டர், ஏதேனும் குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு பதிவிடுங்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : government , Own house, land collector
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...