×

பிரதமர் மோடியின் தூய்மை பணி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட புகைப்படம் பொய்யானது: தனியார் பத்திரிகை ஆய்வில் தகவல்

சென்னை: மாமல்லபுர கடற்கரையில் பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்ததாக பரவும் புகைப்பட குழுவினர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக, கடந்த 11-ம் தேதி காலை சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோ ஓட்டலில் தங்கினார். அன்றைய தினம் பிரதமர் மோடி இரவும் அங்கு தங்கினார். அதிகாலையில் எழுந்த மோடி,  கடற்கரையில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் சென்றார். அப்போது கையில் மசாஜ் செய்வதற்கான தடியை வைத்திருந்தார். கடலில் முழங்கால் அளவுக்கு தண்ணீரிலும் இறங்கி உற்சாகமாக நடந்து சென்றார். கடற்கரையில் கொட்டி  வைக்கப்பட்டிருந்த கருங்கல்லில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

பின்னர் பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் தூய்மை பணி மேற்கொண்டார். கடல் அலையில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை அள்ளி ஒரு பையில் சேகரித்தார். அது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பிளாக்கிங்’ முறையில் 30 நிமிடங்கள் கடற்கரையில் உள்ள குப்பையை சேகரித்து, அதை நட்சத்திர விடுதி ஊழியர் ஜெயராஜிடம் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், உடலை ஆரோக்கியமாகவும்,  கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உறுதியேற்போம். பொது இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. பிரதமரின் செயலுக்கு ஒரு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் இது திட்டமிடப்பட்ட விளம்பரம் என தெரிவித்தனர். இதற்கிடையே  வெளிநாட்டு புகைப்பட கலைஞர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் புகைப்படமும் வெளியானது. மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாமல்லபுரம் கடற்கரையில் மோடி  குப்பைகளை அகற்றிய புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதோடு திரைப்பட பாணியில் அது படமாக்கப்பட்டது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவை ஏராளமானோர் ரீடுவிட் செய்திருந்தனர்.

ஆனால் வெளிநாட்டு குழுவினர் இருப்பது போன்ற புகைப்படம் 2005-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்துக்கு பின்னால் இருக்கும் கட்டிடங்கள் ஸ்காட்லாந்தில் உள்ளவை என்றும், இது  தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தனியார் பத்திரிகை தெளிவுபடுத்தியுள்ளது.

Tags : Karthi Chidambaram ,Modi , PM Modi, Cleaning Work, Karthi Chidambaram, Photography, Private Journalism
× RELATED ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்