×

உத்தரபிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் 2 மாடி கட்டிடம் சரிந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மாவ்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவ் மாவட்டத்தின் முகமதாபாத் எனும் பகுதியில் சிலிண்டர் வெடித்து இரண்டு மாடி கட்டிடம் இடிந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெரிய சத்தத்துடன் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்துள்ளனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு  உடனடியாக தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து முழுமையான விவரங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : building ,building collapses ,UP ,Uttar Pradesh , Uttar Pradesh, cylinder accident, death toll, building collapse
× RELATED சமையல் எரிவாயு சிலிண்டர்...