×

இ பஸ்கள் லாபத்தில் இயங்க வழியில்லை: கர்சன், ஓய்வு பெற்ற பஸ் தொழிலாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர்

தமிழகத்தில் காலம் காலமாக போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றன; அரசு தான் பஸ் போக்குவரத்ைத நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மின்சாரப்பஸ்கள் இயக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. இ பஸ் போக்குவரத்தை  அரசு நடத்தாது; தனியார் வசம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நடத்தும் இ பஸ் போக்குவரத்தில் டிரைவரை தனியார் நியமிக்கும். நடத்துனர் மட்டும் அரசு  தொழிலாளியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. மற்ற  அனைத்தும் தனியார் வசம் போய் விடும். கிலோ மீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என அரசு முடிவு செய்து, அதை ஒப்பந்ததாரருக்கு வழங்கும். இப்படி பல தகவல்கள் வருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மிகவும் குறையும் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். அரசு பஸ்களை இயக்கும் பட்சத்தில், அதில் சட்டவிதிகளின்படி பணியாளர்கள் இருப்பர். மாதச்சம்பளமும் விதிகளின்படியே  வழங்கப்படும். ஆனால் தனியாருக்கு பஸ் இயக்குவதை வழங்கிய பிறகு, எவ்வளவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என அவர்கள் தான் முடிவு செய்வார்கள். அரசின் தலையீடு, கட்டுப்பாடு தளர்ந்து விடும்.  மாதச்சம்பளமும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் தனியாரே முடிவு செய்வார்கள். அந்த சம்பளம் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு இருக்குமா என்பது தெரியாது.

முக்கியமாக வேலைவாய்ப்பு படிப்படியாக குறையும். புதிய  மின்சாரப்பஸ்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தொடர்ந்து வேலைவாய்ப்பு இருக்குமா என்பதும் உறுதியாக தெரியாது. தனியார் வசம் போய்விட்டால் அரசிடம் முறையிட முடியாது.
எனவே பஸ் தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகும். தற்போது அனைத்து போக்குவரத்துக்கழகங்களும் லாபத்தில் இயங்கவில்லை. நஷ்டத்தில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது மின்சாரப்பஸ்களில் இயக்கத்தை  கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டுவருகிறார்கள்.

இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். பலன் கிடைக்காது. ஏசி பஸ்களில் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பதை தற்போது சொல்ல முடியாது. பஸ்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகே தெரியும். இப்போது சென்ட்ரல்-திருவான்மியூர்  இடையே மின்சாரப்பஸ் இயக்கப்படுகிறது. இதில் கட்டணம் அதிகமாகவே உள்ளது.  இதேபோல் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பஸ்களிலும் கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அப்போது பலரும் பயணிப்பதற்கு தயக்கம்  காட்டக்கூடும். லாபத்தில் இயங்கவைப்பதற்கு எந்தவிதத்திலும் முடியாது. சாதாரணப்பஸ்களில் 50-60 பேர் பயணிக்க முடியும். கட்டணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதால் நின்று கொண்டும் பயணிப்பார்கள்.  

மின்சாரப்பஸ்களில் 30-35 பேர் மட்டுமே செல்ல முடியாது. அதிகப்படியான கட்டணம் கொடுத்து, நின்று கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் யாரும் விரும்பமாட்டார்கள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது குறைவான  கட்டணத்தையே பலரும் தேர்வு செய்வார்கள்.  குறைவான கட்டணத்தில் மின்சாரப்பஸ்களை அரசால் இயக்க முடியாது. அப்போது இந்த பஸ்களுக்கு பயணிகள் அதிகமாக வரமாட்டார்கள். இத்தகைய காரணங்களால் பஸ்களை லாபத்தில் இயங்கவைக்க முடியாது. லாபம் இருக்கும் என்று  அரசு கூறுவது சாத்தியமற்றது. குறிப்பிட்ட தொலைவில் சார்ஜ் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் இத்தகைய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு இருக்காது. அதை உறுதியாக சொல்ல முடியும். இதில்  அரசுக்கு வெற்றி ஏற்படும். ஆனால் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு லாபம் இருக்காது. பயணிகளுக்கும் லாபம் இருக்காது. போக்குவரத்துத்தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இத்தகைய பஸ்களை அரசே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு என்பதும் இருக்கும்.

Tags : Curzon ,bus workers ,Karson , Karson, retired bus workers' welfare general secretary
× RELATED மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,...