×

அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் விரைவில் ‘இ-சலான்’ கருவிகள்: 2 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களுக்கு இதுவரை 350 ‘இ-சலான்’ கருவி வழங்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் மீதம் உள்ள இடங்களில் சம்மந்தப்பட்ட கருவியை வழங்கி, திட்டத்தை நிறைவு  செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை என பல்வேறு இடங்களில் சுமார், 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் ேபான்ற  பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர அவ்வப்போது பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்குவோர் மீதும், மோட்டார் வாகனச்சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காதோர் மீதும் நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் பல்வேறு விதமான நவீன முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக லைசென்ஸ், வாகனப்பதிவு உள்ளிட்டவற்றுக்கு போக்குவரத்துத்துறை அறிமுகம் செய்துள்ள இணையதளத்திற்கு  சென்று வீட்டில் இருந்தே விண்ணப்பித்துக்கொள்ளலாம்.  அதிகாரிகள் வரச்சொல்லும் போது, நேரில் சென்று உரிய பரிசோதனைகளுக்குப்பிறகு அதனை பெற்றுக்கொள்ளலாம்.இதேபோல் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் லைசென்ஸ், ஆர்சி புக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை  தொடர்ந்து ஆர்டிஓ, செக்கிங் இன்ஸ்பெக்டர்களுக்கு ‘இ-சலான்’ வழங்க முடிவு செய்யப்பட்டது. ஜூன் மாதம் முதல் இக்கருவியானது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 350 கருவிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆர்டிஓ அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முன்பு அதிகாரிகள் ரசீது எழுதி  தருகிறார்கள்.
இந்நிலையில் இ-சாலன் அறிமுகம் செய்யப்பட்து. இக்கருவியில் போக்குவரத்து விதிமுறை மீறும் வாகனங்களின் எண்ணை பதிவு செய்தால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள சர்வர்களுடன் இணைக்கப்பட்டுள்ள கருவியில்  குறிப்பிட்ட வாகன ஓட்டியின் பெயர், இன்ஜின் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்து விடும்.

மேலும் சம்மந்தப்பட்ட கருவியில் அதிக பாரம் ஏற்றுதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்குதல் என ஏராளமான விதிமீறல்கள் குறித்த தகவல்கள் இருக்கும். இதனால் வாகன ஓட்டி செய்த குற்றத்தை பொருத்து, அதற்கான  பட்டனை அழுத்தினால் உடனே அபராதத்தொகைக்கான சலான் பிரிண்ட் கிடைக்கும். அந்த பிரிண்ட்டை அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியிடம் கொடுப்பார்கள். மேலும் சம்மந்தப்பட்ட கருவியில், கிரேடிட் கார்டு, ெடபிட் கார்டு  முறையில் பணம் செலுத்தும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த வசதியின் மூலமாக குற்றம் செய்தவர், அதற்கான தொகையை அங்கேயே செலுத்திவிட முடியும்.  தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களுக்கு 350 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள கருவிகளை 2 மாதத்துக்குள் வழங்கி பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : E-Salon ,RTO Offices , E-Salon telephone tools for all RTO offices: Plan to complete work in 2 months
× RELATED ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பம் பெற...