×

வேலையில்லாமல் வெறிச்சோடும் தறிக்கூடங்கள் ஜிஎஸ்டியால் சேலம் சரகத்தில் முடங்கி கிடக்கும் ஜவுளி உற்பத்தி

* களை இழந்த தீபாவளி
* நெசவாளர்கள் கண்ணீர்

சேலம்: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. இதில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நெசவுத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நெசவுக்கு ஆதாரமான விசைத்தறி தொழில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. நூல்விலையேற்றம், சாயக்கழிவு போன்ற பிரச்சினைகளால் தொழில் முடங்கி, 90சதவீத ஏற்றுமதி குறைந்து போனதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஜவுளி உற்பத்தியாளர்கள். இதே போல் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவையும் தொழில், முடங்கியதற்கு முக்கிய காரணம். கடந்த 2003ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. பருத்தி நூலுக்கு 2சதவீதமாக இருந்த வரியை 11.2சதவீதமாக உயர்த்தினர். ஜவுளிக்கு சென்வாட் என்னும் பல அடுக்கு வரியும் விதிக்கப்பட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெசவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 2004ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது பருத்தி நூலுக்கான வரியும், சென்வாட் வரியும் அடியோடு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜவுளித் தொழிலுக்கு ஒரு புத்துயிர் கிடைத்தது.

அதன்பிறகு 10 ஆண்டுகளாக ஒரே சீராக தொழில் சென்று கொண்டிருந்தது. 2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாஜக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், ஜவுளித் தொழிலை அடியோடு முடக்கியுள்ளது. 2ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதற்கு பிறகு விதித்த ஜிஎஸ்டியும் தொழிலை கேள்விக்குறியாக்கி வருகிறது என்கின்றனர் ஜவுளித்  தொழில் சார்ந்த ஆர்வலர்கள். இது குறித்து நெசவாளர் மேம்பாட்டு நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஜவுளி உற்பத்திக்காக விசைத்தறியாளர்கள், பருத்தி நூல் வாங்கும் போது 5 சதவீதம் ஜிஎஸ்டியும், விற்பனை செய்யும் போது 5சதவீதம் ஜிஎஸ்டியும் விதிக்கிறார்கள். இந்த வரியை ஒவ்வொரு மாதமும் 15ம்தேதி, விசைத்தறியாளர்கள் செலுத்த வேண்டும். தவறினால் தினமும் அபராதம் விதிக்கப்படுகிறது. விசைத்தறியில் உற்பத்தி செய்யும் ஜவுளியை பெரும்பாலும் கடனுக்குத்தான், வியாபார நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். அவர்கள் பணம் கொடுக்க, குறைந்த பட்சம் 3மாதங்களுக்கு மேலாகிறது.

இது போன்ற நிலையில் மாதந்தோறும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடன்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீடுகளும் அடியோடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஜிஎஸ்டி என்னும் பல அடுக்கு வரியால் ஜவுளியின் விலையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஜவுளி உற்பத்தியாளர்களோடு நுகர்வோரையும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையோடு ஏற்றுமதியும் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 4ஆண்டுகளில் ஏற்றுமதி 80சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் விசைத்தறியாளர்கள், உள்ளூர் ரகங்களை தயாரித்து விற்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே போல் ஆயத்த ஆடை நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி இலக்கு இல்லாமல் போனதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ேநரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால் வருங்காலத்தில் ஜவுளி உற்பத்தியும், நெசவுத் தொழிலும் கேள்விக்குறியாகி விடும். எனவே இந்த அவலத்திற்கு தீர்வு காண, சாயக்கழிவு பிரச்சினைகளை தீர்ப்பதோடு, ஜவுளி ஏற்றுமதியிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.  அனைத்திற்கும் மேலாக சேவை வரி என்னும் ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து ெசய்ய வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினார்.

தீபாவளி வியாபாரம் 75 சதவீதம் சரிந்தது விற்பனையாளர் வேதனை
ஜவுளி விற்பனையாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘2017ம் ஆண்டு  ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின், ஜவுளி விற்பனை தொழில் அடியோடு முடங்கிவிட்டது. பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள்,   ஜிஎஸ்டி பற்றி இன்னும் முழுமையான புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஜிஎஸ்டி  அமலுக்கு முன்பு, தீபாவளி பண்டிகைக்காலங்களில் ஜவுளி விற்பனை கனஜோராக  இருக்கும். ஜவுளி விற்பனையாளர்கள் பணத்தை கொண்டு வந்து, ஜவுளியை எடுத்து  செல்வார்கள். தற்போது ஜவுளி வாங்குவோர், விற்பனை செய்வோர் அனைவரும் ஜிஎஸ்டி  கணக்குகாட்ட வேண்டும் என்று உள்ளது. இதன் காரணமாகவே கடந்த இரண்டு ஆண்டாக  ஜவுளி விற்பனை 75 சதவீதம் சரிந்துள்ளது. எங்களுக்கு ஜவுளி விற்பனை  தொழிலைதவிர வேறு தொழில் தெரியாது. அதனால் லாபம் இல்லை என்றாலும், தொழில்  செய்ய வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் இருப்பதால், சொற்ப  வருமானமாக இருந்தாலும் ஜவுளி விற்பனை செய்து வருகிறோம்,’’ என்றார்.

ஆர்டர் இல்லாமல் வருமானம் குறைந்தது விசைத்தறியாளர் கவலை
விசைத்தறி உரிமையாளர் செல்வராஜ் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும்  தீபாவளி, ெபாங்கல் விசைத்தறி கூடங்களில் நிற்க நேரம் இல்லாமல் இரவு, பகலாக  விசைத்தறிகள் இயங்கிக்கொண்டு இருக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டாக சரியான  ஆர்டர் இல்லை. இதன் காரணமாக விசைத்தறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து  வருகிறது. தறி இயக்கும் நேரத்தையும் குறைத்து கொண்டோம். தீபாவளி  பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரமே இருக்கும்பட்சத்தில், சரியான ஆர்டர்  இல்லை. இதனால் விசைத்தறி தொழிலை சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை  இல்லாமல் உள்ளனர். வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். இவர்கள்  குழந்தைகளுக்கு கூட தீபாவளி பண்டிகைக்கு ஜவுளிகள் எடுக்க முடியாத நிலையில்  உள்ளனர். சீரான ஆர்டர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்றார்.

ஜிஎஸ்டியில் இருந்து முழுவிலக்கு வேண்டும் நெசவாளர் கோரிக்கை
நெசவாளர் சங்க நிர்வாகி சிங்காரம் கூறுகையில், ‘‘தமிழகத்திலுள்ள 10 மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஜவுளி ஏற்றுமதி குறைந்துவிட்டது. இதன்காரணமாக நவீன விசைத்தறிகளில் கூட, உள்நாட்டு ரகங்களையே தயாரித்து வருகின்றனர். இதனால் உற்பத்தி அதிகரித்து, சிறு விசைத்தறியாளர்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், ஜிஎஸ்டி விதித்த பின்பும் ஏற்பட்டுள்ள மந்தம், இதுவரை மாறவேயில்லை. ஒரு பக்கம் தேக்கம், மறுபக்கம் கடனுக்கு விற்பனை, மாதந்தோறும் ஜிஎஸ்டி என்று பல்வேறு காரணங்களால் தொழில் தொடர்ந்து முடங்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முடிவு கட்ட, ஜவுளிக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுவிலக்கு அளிக்க ேவண்டும்,’’ என்றார்.

Tags : Salem ,Salem Community , Production, stagnant textile,Salem community,GST
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...