×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் விளைந்து நிற்கிற வெற்றியை கவனமாக அறுவடை செய்ய களப்பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,: “நாங்குநேரி,  விக்கிரவாண்டி தொகுதியில் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை  செய்ய அயராது களப்பணியாற்றுங்கள்” என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நடைபெறும் அவலகரமான-அடிமைத்தனமான ஆட்சிக்குப் பாடம் புகட்ட தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக வாக்காளர்கள் நிச்சயமாக  நம்புகிறார்கள். தங்களை அலட்சியப்படுத்துகிற- அவமதிக்கிற-அலைக்கழிக்கிற  ஆட்சியாளர்களை தண்டிப்பதற்கான தக்கதொரு வாய்ப்பாக வாக்களிக்கும் நாளினை எதிர்பார்க்கிறார்கள். மக்களிடம் தெளிவாக வெளிப்படுகிற அந்த உணர்வினை திமுகவின் செயல்வீரர்களாம்-நம் ஆருயிர் தலைவரான கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள், களத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும்-தங்களுக்கான ஏவல் ஆட்களாக ஆட்சியாளர்கள் மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். தேர்தல் களத்தில் வேறு எவர் மீது வைக்கின்ற நம்பிக்கையை விடவும், வாக்காளர்களாகிய பொதுமக்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்திட வேண்டும். விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்திக்கும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் திமுகவினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமைய வேண்டும். அதுபோலவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி  வேட்பாளரின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்.

 வீடு வீடாகச் செல்லுங்கள்; ஒவ்வொரு வாக்காளராகச்  சந்தியுங்கள்; நமது அணிக்கு அவர்களின் வாக்குகளை உறுதி செய்யுங்கள். மக்கள் நமக்குத் தரத்தயாராக இருக்கின்ற வெற்றியைத் தட்டிப் பறித்திட ஆட்சியாளர்கள் சாம-பேத-தான-தண்டம் என தந்திர வழிகள் அனைத்தையும்  கையாள்வார்கள்; அதிகார அடாவடி அத்துமீறல்களில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் பணத்தால் வெற்றியை விலைபேசி  வாங்கிடலாம் என நினைப்பார்கள். அவர்களின் அத்தனை முறைகேடுகளையும் தில்லு முல்லுகளையும் எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் ஆயுதம் உழைப்பு. உழைப்பு. உழைப்பு. அந்த உழைப்பினை ஒரு சிறிதும் சிதற விடாமல் தேர்தல் களத்தில் காட்டுங்கள்.

நாங்குநேரி-விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள். வெற்றி நமக்குக் காத்திருக்கிறது. அக்டோபர் 21 அன்று, வாக்காளர்களின் திருக்கரங்களிலிருந்து அதனைப் பெறுவதற்கு உழையுங்கள். அக்டோபர் 24ல் வெற்றிச் செய்தியினைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கையாக்கப் பாடுபடுங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.Tags : volunteers ,constituency ,Vikramaditya ,Nankuneri ,MK Stalin ,Vikramaditya Constituency ,Nanguneri , Nankuneri, Vikravandi, MK Stalin
× RELATED கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு