×

முறைசாரா உச்சி மாநாட்டில் 2-வது நாளாக பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆலோசனை

சென்னை: முறைசாரா உச்சி மாநாட்டில் 2-வது நாளாக பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி அவரை வரவேற்றார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். முன்னதாக நேற்று காலை 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரை தொடர்ந்து சீன அதிபர் ஜின் பிங் தனி விமானம் மூலம் சரியாக நேற்று மதியம் 2 மணிக்கு சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திற்குள் தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கரகம், பரதம், மேளதாளம் போன்றவை அரங்கேற்றம் செய்து காட்டப்பட்டது. இதை சீன அதிபர் ஜின்பிங் ஒவ்வொன்றாக நின்று ரசித்து பார்த்து பாராட்டியபடி சென்றார்.

பின்னர் மாலை 4.05 மணிக்கு கிண்டி ஓட்டலில் இருந்து காரில் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். மாலை 5.03 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் அருகே காரில் வந்து இறங்கினார். காரில் வந்து இறங்கிய சீன அதிபரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடந்து சென்றபடி அர்ஜுனன் தபசு சிற்பத்தை பார்த்து ரசித்தனர். அங்குள்ள சிற்பங்களின் வரலாற்றை பிரதமர் மோடியே சீன அதிபருக்கு விளக்கினார். சீன அதிபரும் அங்குள்ள கலை சிற்பங்களை ரசித்து பார்த்தார்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதில் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி, வடை உள்ளிட்ட உணவு வகைகளே பரிமாறப்பட்டது. இதை சீன அதிபர் விரும்பி சாப்பிட்டார். விருந்து முடிந்ததும், நேற்று இரவு9.00 மணிக்கு மேல்  சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார். இந்நிலையில் இன்று காலை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து புறப்பட்டு கோவளம் சென்றார். அவர் செல்லும் வழியில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் மாணவர்கள் என இந்தியா - சீனா தேசிய கொடிகளை ஏந்தி வரவேற்றனர். கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு வந்தடைந்த சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : Modi ,Chinese ,summit ,India ,Mamallapuram ,President ,Kovalam , India, China, Prime Minister Modi, Chinese President, Jin Ping, Mamallapuram, Kovalam, Informal Summit
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...