×

மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களை ரசித்தார் ஜின்பிங்

* கடற்கரைகோயில் எதிரே சீன அதிபருக்கு மோடி விருந்து
* இரு தலைவர்களும் தனியாக சந்தித்து பேச்சு

சென்னை: இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் ஆடல், பாடல், நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களை பார்த்து ரசித்தனர். இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று இரவு சீன அதிபருக்கு மோடி விருந்து அளித்து கவுரவித்தார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். முன்னதாக நேற்று காலை 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். மோடி 12.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் முன் கூட்டியே வந்துவிட்டார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாமக தலைவர் ஜி.கே.மணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி, காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தை சென்றார். அங்கிருந்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு சென்றார்.

அவரை தொடர்ந்து சீன அதிபர் ஜின் பிங் தனி விமானம் மூலம் சரியாக நேற்று மதியம் 2 மணிக்கு சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திற்குள் தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கரகம், பரதம், மேளதாளம் போன்றவை அரங்கேற்றம் செய்து காட்டப்பட்டது. இதை சீன அதிபர் ஜின்பிங் ஒவ்வொன்றாக நின்று ரசித்து பார்த்து பாராட்டியபடி சென்றார். பின்னர் சீனாவில் இருந்து வந்திருந்த குண்டு துளைக்காத காரில் ஏறி சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்றார். விமான நிலைய நுழைவு வாயிலில் இருந்து ஓட்டல் செல்லும் வரை பள்ளி மாணவ-மாணவிகள் இரு நாட்டு கொடிகளையும் அசைத்து காட்டி அவருக்கு சாலையின் இரு பக்கமும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போன்று விமான நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் இரு நாட்டு கலை அம்சங்கள் அடங்கிய பேனர் வைத்து வரவேற்றனர்.

சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு கிண்டி சோழா ஓட்டல் சென்றடைந்த சீன அதிபர், அங்கு ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை 4.05 மணிக்கு கிண்டி ஓட்டலில் இருந்து காரில் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். அவரது வாகனம் கிண்டியில் இருந்து புறப்பட்டு படேல்சாலை, மத்திய கைலாஷ், ராஜிவ்காந்தி சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள டைடல் பார்க், கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர், கோவளம் வழியாக மகாபலிபுரத்துக்கு சரியாக 5 மணிக்கு நுழைந்தது. முன்னதாக, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடியும் மாலை 4.53 மணிக்கு தனி காரில் மாமல்லபுரம் நோக்கி புறப்பட்டார். பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் துண்டுடன் காணப்பட்டார். அவர் சரியாக 5 மணிக்கு மாமல்லபுரம் வந்து, அர்ஜுனன் தபசு சிற்பம் முன் வந்து காரில் இறங்கினார். அதைத்தொடர்ந்து மாலை 5.03 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் அருகே காரில் வந்து இறங்கினார். காரில் வந்து இறங்கிய சீன அதிபரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். ஒரு நிமிடம் இருவரும் கைகுலுக்கி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து அதே இடத்தில் சுமார் 3 நிமிடங்கள் இரு தலைவர்கள் மட்டும் தனியாக நின்று ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசி வாழ்த்துக்களை பரிமாறினர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடந்து சென்றபடி அர்ஜுனன் தபசு சிற்பத்தை பார்த்து ரசித்தனர். அங்குள்ள சிற்பங்களின் வரலாற்றை பிரதமர் மோடியே சீன அதிபருக்கு விளக்கினார். சீன அதிபரும் அங்குள்ள கலை சிற்பங்களை ரசித்து பார்த்தார். அப்போது, இரு நாட்டு தலைவர்களுடன், மொழி பெயர்ப்பாளர்கள் இரண்டு பேர் மட்டுமே உடன் இருந்தனர். அதிகாரிகளோ, செயலாளர்களோ யாரும் அருகில் இல்லை. அர்ஜுனன் தபசு மற்றும் அதன் சிற்பங்களை 10 நிமிடங்கள் ரசித்து பார்த்தனர். பின்னர் அதன் அருகில் இருந்த வெண்ணை உருண்டை பாறைக்கு இரண்டு தலைவர்களும் சென்றனர். அந்த பாறையின் அழகை நீண்ட நேரம் பார்த்து ரசித்த சீன அதிபர், அதன் வரலாற்றை பிரதமர் மோடியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இரு தலைவர்களும் அந்த பாறையின் முன் நின்றவாறு இரு கைகளையும் உயர்த்திக் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பின்னர் காரில் ஏறி அருகில் உள்ள, ஐந்து ரதம் இருக்கும் இடத்துக்கு வந்தனர். அங்கும் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து ரதத்தின் அழகை நடந்து சென்றபடி தலைவர்கள் பார்த்தனர். சரியாக மாலை 5.38 மணிக்கு ஐந்து ரதம் அமைந்துள்ள வளாகத்தில், தென்னை மரம் சூழ்ந்துள்ள பசுமையான ஒரு பகுதியில் இரண்டு நாட்டு தலைவர்களும் நாற்காலியில் அமர்ந்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்களுக்கு, தமிழர்கள் விரும்பி குடிக்கும் இளநீர் வழங்கப்பட்டது.

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் இளநீரை ரசித்து குடித்தபடி அந்த இடத்தில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அப்போது, இரு நாட்டு தலைவர்களும் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. இருவரும் பேசியதை அருகில் இருந்த மொழி பெயர்ப்பாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஐந்து ரதம் பகுதியை மட்டும் மோடியும், சீன அதிபரும் 25 நிமிடம் பார்த்து ரசித்தனர். இதையடுத்து சரியாக மாலை 6 மணிக்கு கடற்கரை கோயிலுக்கு இரு நாட்டு தலைவர்களும் சென்றனர். அங்கும் நடந்து சென்றபடி அங்குள்ள சிற்பங்களை பார்த்தனர். கடற்கரை கோயில் முன் நின்று இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அங்கும் சுமார் 25 நிமிடம் சுற்றிப்பார்த்துவிட்டு சரியாக 6.25 மணிக்கு கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்க்க இரு நாட்டு தலைவர்களும் வந்தனர். அப்போது, இந்திய மற்றும் சீன அதிகாரிகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலாசேத்ரா குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் 6.30 மணிக்கு நடைபெற்றது.

கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இரு நாட்டு அதிகாரிகளும் அந்த அரங்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இருந்தபடி பார்வையிட்டனர். பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட 6 நிகழ்ச்சிகள் கலாசேத்ரா குழுவினரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக மற்றும் இந்திய பாரம்பரியத்தை விளக்கி கூறியதாக இருந்தது. அதை பிரதமர் மோடியும், சீன அதிபரும் ரசித்து பார்த்தனர். கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதில் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி, வடை உள்ளிட்ட உணவு வகைகளே பரிமாறப்பட்டது. இதை சீன அதிபர் விரும்பி சாப்பிட்டார். விருந்து முடிந்ததும், நேற்று இரவு9.00 மணிக்கு மேல்  சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார். பிரதமர் மோடி, காரில் கோவளம் புறப்பட்டு சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார்.

சீன அதிபர் ஜின்பிங் சென்னை மற்றும் மாமல்லபுரம் வருவதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்தது. இரு நாட்டு தலைவர்கள் செல்லும் பாதை முழுவதும் ஒரு வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்கவில்லை. சீன அதிபர் சாலை மார்க்கமாக சென்ற சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு 34 இடங்களில் ஆடல், பாடல், நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாழை, கரும்பு, பூக்களால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது. இரு நாட்டு தலைவர்களும் நேற்றும், இன்றும் மாமல்லபுரம் மற்றும் கோவளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தும்போது, இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இரண்டு நாள் சந்திப்பின்போது இரண்டு நாட்டு தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பால் இந்தியா - சீன இடையே பொருளாதாரம் வலுப்படும். அதேநேரம், சீன அதிபர் இந்தியா வருகையொட்டி உலக நாடுகளின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காலை முதல் பரபரப்பு

11.10 மணி: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்
11.15 மணி: கவர்னர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர், கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு
11.20 மணி: ஹெலிகாப்டர் மூலம் கோவளம் (திருவிடந்தை) சென்றார்
11.50 மணி: ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கார் மூலம் ஓட்டலுக்கு சென்றார். வழிநெடுக மக்கள் வரவேற்பு
மதியம் 2 மணி: சீன அதிபர் ஜின்பிங் தனி விமானத்தில் சென்னை வந்தார்
2.15 மணி: விமான நிலையத்தில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர்
2.20 மணி: விமான நிலையத்தில் நடந்த கலைநிகழ்ச்சிகளை சீன அதிபர் பார்த்தார்
2.25 மணி: விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஓட்டலுக்கு புறப்பட்டார்
2.35 மணி: கிண்டி, ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் வந்தார்
4.05 மணி: சீன அதிபர் ஓட்டலில் இருந்து மீண்டும் காரில் மாமல்லபுரம் புறப்பட்டார்
4.53 மணி: கோவளம் ஓட்டலில் இருந்து பிரதமர் மோடி மாமல்லபுரம் புறப்பட்டார்
5.00 மணி: பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தடைந்தார்
5.03 மணி: சீன அதிபர் மாமல்லபுரம் வந்தடைந்தார்
5.05 மணி: பிரதமர் மோடி சீன அதிபரை கைகுலுக்கி வரவேற்றார்
5.08 மணி: அர்ஜுனன் தபசு சிற்ப கூடத்தை இருவரும் பார்த்து ரசித்தனர்
5.20 மணி: வெண்ணை உருண்டை பாறையை பார்த்தனர்
5.30 மணி: ஐந்து ரதம் சிற்பத்தை பார்வையிட்டனர்
5.38 மணி: ஐந்து ரதம் வளாகத்தில் இரு தலைவர்களும் நாற்காலியில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்
6.00 மணி: கடற்கரை கோயில் சென்றனர்
6.25 மணி: கடற்கரை கோயில் வளாகத்தில் நடந்த கலைநிகழ்ச்சி அரங்கம் வந்தனர்
7.03 மணி: கலைநிகழ்ச்சி முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் கலைகுழுவினருடன் புகைப்படம் எடுத்தனர்
7.15 மணி: சீன அதிபருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து வழங்கி கவுரவித்தார்
9.40 மணி: முதல் நாள் நிகழ்ச்சி முடிந்து இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றனர்.

பத்திரிகையாளர்கள் அதிருப்தி

தமிழ்நாட்டுக்கு சீன அதிபர் வந்துள்ளதையடுத்து மாமல்லபுரத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருவான்மியூர் வழியாக மாமல்லபுரம் செல்லும் சாலையில் 8 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து சோதனை செய்து வருகின்றனர். பலத்த சோதனைக்கு பிறகே, அந்த வழியாக செல்ல அனுமதி பெற்றுள்ள வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

தனியார் ஓட்டலில் தங்கும் சீன அதிபர் மாலை மாமல்லபுரத்திற்கு வருகை தந்து அங்கு உள்ள சிற்பங்களையும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளையும் பார்த்தார். இதனால் முன் கூட்டியே மாமல்லபுரத்திற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் பெரியளவில் மீடியா சென்டர் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த இடத்தில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் உள்ளே வந்த பத்திரிகையாளர்களுக்கு வெளியே செல்ல அனுமதி இல்லாமல் உள்ளேயே வைத்திருப்பதால், வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அங்கு வைத்திருந்த தொலைக்காட்சியில் பார்த்தே செய்தி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதால், பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பேனர் இல்லை மக்கள் மகிழ்ச்சி

சென்னையில், கடந்த மாதம் பேனர் விழுந்து சுப என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனாலும், சீன அதிபர் தமிழகம் வருவதையொட்டி அவரை வரவேற்க பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளே நீதிமன்றம் அனுமதி கேட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் பேனர் வைக்க அனுமதி அளித்தது. ஆனாலும், முக்கிய சந்திப்புகளில் மட்டுமே பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜின்பிங்கையும் வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் பேனர்கள் ஏதும் வைக்கப்படவில்லை.

மின்னொளியில் ஜொலித்த கடற்கரை

ஐந்து ரதம் பகுதியில் இருந்து புறப்பட்ட இருவரும் கடற்கரை கோயிலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். அதற்குள் மாலை நேரம் கடந்து இருள் சூழ்ந்தது. அப்போது அந்த பகுதி முழுவதும் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மின் ஒளியில் கடற்கரை கோயில் ஜொலித்தது. அதை இருவரும் சிறிது நேரம் கண்டுகளித்தனர். பின்னர் கோயில் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

Tags : Jinping ,Mamallapuram ,arjunan , Jinping reveals, five sculptures , Mamallapuram, Arjunan tapas
× RELATED புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்