×

சென்னை வந்தார் சீன அதிபர் ஜி ஜின் பிங்... கரகாட்டம், ஒயிலாட்டம், மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பெய்ஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் சீன அதிபர் ஜி ஜின் பிங் சென்னை வந்தார். சென்னை வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரை வரவேற்றனர். மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மேள தாளங்கள் முழங்க தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் நட்சத்திர விடுதிக்கு செல்லும் வழியில் 30 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரு  நாட்டு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சென்னை வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய  முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு நாட்டு தலைவர்களும் இன்றும், நாளையும் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில்  சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்திய - சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து  விவாதிக்கிறார்கள். மாலை 4 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக  மாமல்லபுரம் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வந்தடையும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள். அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை  பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இங்கு குண்டு துளைக்காத வகையில் அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சீன அதிபர் சாலை மார்க்கமாக கிண்டி திரும்புகிறார்.

Tags : Xi Jin Ping ,Chinese ,President ,Chennai , Chinese President, Xi Jin Ping, Chennai Visits Chinese President, Welcome
× RELATED புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்