×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து கட்சியின் அரசியல் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் சிறப்பு தீர்மானமாக தமிழகத்திற்கு வரக்கூடிய சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தேசிய அளவில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், மாநில அளவில் அதிமுக தலைமையில் அமையப்பெற்ற பாஜ, அதிமுக,  பாமக, தேமுதிக, தமாகா கூட்டணியில் அங்கம் வகித்த போது முதல்வரிடம் முக்கியமான கோரிக்கை வைத்தோம். தமிழக இலக்கியங்களில் மருதநில மக்களான பெரிதுபடுத்தப்பட்டிருக்கூடிய 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல  வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கக்கூடிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், பட்டியல் பிரிவில் இருந்து விளக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் சேர்ப்பதற்குண்டான பரிந்துரையை மத்திய அரசு செய்திட வேண்டும் என்று  கூட்டணியில் சேருகின்ற போது முன்வைத்த நிபந்தனைகள் ஆகும்.  

அப்போது எங்களுடைய கோரிக்கையை ஏற்று முதல்வர் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். அதன்பிறகு புதியதமிழகம் கட்சியின் சார்பில் முதல்வரை சந்தித்தோம். அப்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன்  தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி அதிமுக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கட்சியில் அங்கம் பெற்றது. தேர்தல் முடிந்து ஏறக்குறைய 5 மாதம் முடிந்து விட்டது. நாடாளுமன்ற  தேர்தலுக்கு முன்பு கொடுத்த தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யக்கூடிய அம்சங்களை மாநில அரசு நிறைவேற்றவில்லை, முதல்வர் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து கிராமங்களிலும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தலை  புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வலியுறுத்தி போராட்டம், பேரணி நடத்தினோம். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் மையக்கருத்துகளை உள்வாங்கி போராடக்கூடிய தேவேந்திரகுல  மக்களின் உணர்வுகளை கருதி தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்காமல் அதிமுக அரசுக்கு ஆதரவு அளிப்பது வீணானது என்பது கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் ஒன்று போல் தெரிவித்தனர். எனவே நாங்குநேரி,  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுக அரசுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.   மாநில அரசு, முதல்வர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் கருப்பு  கொடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Namukuneri ,Vikravandi ,AIADMK ,Krishnaswamy Nanukuneri ,Tamil Krishnasamy Interview , Nanukuneri, idolatry, by-election, Krishnasamy
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...