×

உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சென்னையில் பயிற்சி முகாம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட பணியாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான பயிற்சி முகாம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, இவிஎம் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்தல், தேர்தலுக்கான பொருட்களை தயார் செய்தல், வாக்காளர்பட்டியல் தயாராக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே வார்டு மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படை யில் வார்டுகளை பிரிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. தற்போது புதிதாக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்தது. இதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி வார்டுகளை பிரிப்பது குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Training Camp ,District Officers ,Local Government Elections Local Government Elections ,All District Officers for Training Camp , Training Camp,District Officers,Preparation,Local Government Elections
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்