×

அறந்தாங்கி அருகே சுடுமண் குடுவைகள் கண்டுபிடிப்பு

*தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் பகுதியில் கிடைத்த சுடுமண் குடுவைகள், பானைகளை பொதுமக்கள் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அறந்தாங்கியை அடுத்த மாத்தூர் ராமசாமிபுரம் பகுதியில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்த சுடுமண் குடுவை ஒன்றை கண்டெடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு மண்ணால் செய்யப்பட்ட சுடப்பட்ட ஒரு பானையில் மனிதபற்கள் மற்றும் எலும்புகள் இருந்தன. இது முதுமக்கள் தாழியாகும். தொடர்ந்து பொதுமக்கள் அங்கு மேலோட்டமாக கிடைத்த பொருள்களை எடுத்துச் சென்று பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரபு, தொல்லியல் மன்ற நிர்வாகிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது, கல்கோடாரி கண்டெடுக்கப்பட்டது.

மேலும் பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் இருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த ஆய்வைப்போன்று இப்பகுதியிலும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாத்தூர்ராமசாமிபுரம் அருகே அம்பலத்திடல் என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் குடுவை, முதுமக்கள் தாழி இருந்த சுடுமண் பானை ஆகியவற்றை அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Aranthangi , Aranthangi , hot flasks,invention
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு