×

தஞ்சை முதல் ஜூவன்ஜோ துறைமுகம் வரை தமிழருக்கும், சீனருக்கும் நூற்றாண்டு கால உறவு : கல்வெட்டு, வரலாற்று ஆய்வுகளே சான்று

சென்னை: தமிழகத்தின் தஞ்சை பெரிய கோயில் முதல் சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம் வரை பல நூற்றாண்டு காலம் சீனருக்கும் தமிழர்களுக்கும் இடையில் பலமான உறவுகள் இருந்ததற்கான கல்வெட்டுகளும், வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான தொடர்பு பல நூற்றாண்டு காலத்திலேயே வணிக ரீதியாக இருந்துள்ளது. சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம், முந்தைய கடல்வழி பட்டுப்பாதையின் துவக்கமாக இருந்தது.  கடல் பயணியர்களான மார்கோபோலோ (இத்தாலி), இபின் பதூதா (மொராக்கோ)  ஆகியோரின் ஆய்வுகளில் ஜூவன்ஜோ துறைமுகம், உலகிலேயே அதிக வர்த்தகம் நடைபெற்ற இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சொங் மற்றும் யுவான் வம்ச ஆட்சியின் போது தான், சீனர்களுடனான தமிழர்களின் வணிகம் தொடங்கி உள்ளது. குறிப்பாக, 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளில், பல்லவ மன்னன் சீனாவுக்கு சென்று அங்கு மிகப்பெரும் பண்டமாற்று முறையில் வணிகனாக உலா வந்துள்ளார். பின்னர், 9ம் நூற்றாண்டில் சீனாவுடன் வணிகம் சுணக்கம் ஏற்பட்டு, மீண்டும் 10ம் நூற்றாண்டின் பாதியில் சோழதேசத்து வணிகர்கள் மீண்டும் சீனர்களுடனான வணிகத்தைப் புதுப்பித்தனர்.

சீனாவிடம் இருந்து அதிக அளவிலான தங்கம், வெள்ளி, ஈயம், தகரம், நாணயங்கள் ஆகியன  பண்டமாற்று முறையில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உலோகங்கள் சோழ வீதிகளில் புழங்கின. சோழர்கள் சீனர்களுடன் வணிகம் செய்ததற்கு அழியாச் சான்றாக இருக்கும்  ஜுவன்ஜோவில் உள்ள கையுவான் புத்த கோயிலின் ஒருபகுதியில் பல இந்து கடவுள்களின் சிலைகளை காண முடிகிறது.
இதன் மத்தியில் வெளிர் மஞ்சள் நிற ஒளியில் தமிழ் கல்வெட்டு ஒன்றுள்ளது. அதன் பொருள் சீன மொழியில் விளக்கமாக தரப்பட்டுள்ளது. 1281ல் அக்கல்வெட்டு சீன அரசருக்குப் பரிசாக  அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் விமானத்தில் 2வது தளத்தின் வடகிழக்கு மூலையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிலையானது மங்கோலியரின் உருவத்தை ஒத்துக் காணப்படுகிறது. மீசை, குறுந்தாடி, சீன கழுத்துப் பட்டையுடன் கூடிய அரைக்கைச் சட்டை ஆகியவை இவர் மங்கோலியர் அல்லது சீனராக இருக்க வாய்ப்புண்டு என்று ‘அமராவதி’ ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் நேரடிக் கண்காணிப்பில் தஞ்சைக் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவருடைய ஒப்புதலின் பேரிலேயே இச்சிலை அங்கு நிறுவப்பட்டிருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தமிழருக்கும், சீனருக்கும் இடையேயான உறவுக்கு இது மிகச்சிறந்த  சான்றாக உள்ளது என்றால் மிகையல்ல.

Tags : Chinese ,Tanjore ,Centenary , Centenary relationship, Tamil and Chinese,Tanjore to Juwanjo port
× RELATED சீன மருத்துவத்தில் என்ன சிறப்பு?!