×

மதுரையில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுப்பதில் அமைச்சர்-எம்எல்ஏ ஆதரவாளர்கள் போட்டி: ஏலம் நிறுத்தம்

மதுரை: மதுரையில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுப்பதில் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சரவணன் எம்எல்ஏ ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள போட்டியால் 14 பார்களின் ஏலத்தை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 260 டாஸ்மாக் கடைகள் வரை இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகளை ஒட்டியே பார்கள் செயல்படுகின்றன. பார்கள் ஏலத்தில் அதிமுக ஆதரவு பெற்றவர்களுக்கே டெண்டர் படிவம் வழங்கப்பட்டன. ஆளுங்கட்சியினரின் ஆதரவு பெற்ற 150-க்கும் மேற்பட்ட பார்களுக்கான ஏலம் முடிந்துவிட்டது.

இந்நிலையில், மதுரை மாநகர் பகுதியில் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 14 பார்களின் ஏலம் இன்னும் நடைபெறவில்லை. இந்த பார்களை ஏலம் எடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள், எம்எல்ஏ சரவணன் ஆதரவாளர்கள் என இரு பிரிவாக போட்டியில் இறங்கியுள்ளதால் யாருக்கு வழங்குவது என்பதில் அதிகாரிகள் முடிவு எடுக்க முடி யாத சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் பார் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் செல்லூர் கே.ராஜூ. அவரது ஆதரவு பெற்றவர்களுக்கே நகரில் பார் ஒதுக்கப்படுகிறது. இதில் மதுரை வடக்கு, மத்தி, மேற்கு ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் மதுரை தெற்கு தொகுதிக்குள் உள்ள 14 பார்களை தனது சம்மதம் இல்லாமல் யாருக்கும் வழங்கக்கூடாது என எம்எல்ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். இவருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவு இருப்பதால் அதிகாரிகள் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிக்கொண்டனர். பார் உரிமையாளர்கள் சங்கம் தலையிட்டும் இப்பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், 14 பார்களுக்கும் பல மடங்கு கூடுதல் தொகைக்கு ஏலத்தொகையை நிர்ணயித்து அதிமுக பிரமுகர் ஒருவரே டெண்டர் போட்டு புதிய குழப்பத்தையும் உருவாக்கி உள்ளார். எம்எல்ஏ., அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதிப் பிரச்சாரத்தில் உள்ளதால் பேசித் தீர்க்க முடியவில்லை. எதிர்க் கட்சியான திமுக உட்பட மாற்றுக் கட்சியினரே அமைதியாக இருக்கும்போது அதிமுகவினர் தங்களிடையேயான போட்டியில் பிரச்சினையை பெரிதாக்கி வருகின்றனர்.

ஏலத்தொகை குறைப்பு:
டாஸ்மாக் பார்களுக்கான உரிமக் கட்டணம் அந்தந்த கடைகளின் மது விற்பனையில் 3% என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகையை மாநகரில் 1.8%, பேரூராட்சிகளில் 1.6%, கிராமப் பகுதிகளில் 1.4% என தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகரில் இதுவரை ஆண்டுக்கு ரூ.3 லட்சம் செலுத்தியவர் இனி ரூ.1.80 லட்சம் செலுத்தினால் போதும். இது பார்களை நடத்தி வருவோருக்கு கூடுதல் லாபத்தைத் தரும். அதிமுக.வினர் அவர்களின் ஆதரவாளர்களே பெரும்பாலான பார்களை நடத்துவதால் கூடுதல் லாபத்தைப் பெறுகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பார் வருமானம் பாதிப்க்கப்பட்டுள்ளது. 100 சதவீதக் கடைகளிலும் பார் திறப்பது என்ற அடிப்படையில் உரிமக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் காரணம் தெரிவிக்கப்படுகிறது.

Tags : Minister-MLA ,Auction Stop ,Madurai ,Supporters Compete in Auction of Task Bars , Madurai, Task Bars, Auction, Minister-MLA, Supporters, Competition, Bidding
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...