×

பென்னாகரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல் வட்டங்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி:  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஈச்சம்பாடி மலை குன்றுகளில் நூற்றுக்கணக்கான பெருங்கற்கால கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 3000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் இத்தகைய பெருங்கற்கால பண்பாட்டு ஈமக் குழிகள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளன. ஏரியூர் பகுதியில் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை சார்பாக, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இங்கு காணப்படும் பெருங்கற்கால கல்வட்டங்களில் பெரும்பாலானவை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அக்குழிகளில் புதையல் இருக்கும் என்ற நம்பிக்கையில், சமூக விரோதிகளால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பிரிவு பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில், இப்பகுதியை ஆய்வு செய்ததில், இக்கால மக்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து, கற்களால் ஆன குழிகளை அமைத்து அதன் மேல் பெரிய கல்லால் மூடி, சுற்றிலும் பெரிய பெரிய கற்களை வட்டமாக வைத்து குழிகள் ஏற்படுத்தியுள்ளனர். இது கல்வட்டம் எனப்படும்.

மேலும், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு உடல் தேவை என்பதால், மிக நேர்த்தியாக அறிவியல் தொழில் நுட்பத்தோடு வெட்டி எடுக்கப்பட்ட நான்கு கற்பாறைகளை ஒன்றோடு ஒன்று தாங்கிப் பிடிக்கும் வகையில், ஸ்வஸ்திக் சின்னம் போல குழிகளை அமைத்து அதனுள் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றை வைத்து புதைத்து விடுவர். இக்குழியின் வடக்குப்புறம் அல்லது கிழக்குப்புறமாக  இடு துளை காணப்படுகிறது. அதாவது வருடத்திற்கு ஒருமுறை ஆவிகளுக்கு உணவு இடுவதற்காக இந்த துளை அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சில வரலாற்றாளர்கள் இது ஆவி வந்து செல்வதற்கான வழி என்று கருதுகின்றனர். இத்தகைய பெருங்கற்காலப் பண்பாடு இப்பகுதியில் கண்டறியப்பட்டதன் மூலம் சுமார் 3000 ஆண்டுக்கு முன்பிருந்தே, ஏரியூர் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

Tags : Pennagaram , Discovery of stone circles , 3000 years ,Pennagaram
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...