×

சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் திபெத்திய மாணவர்கள் கண்காணிப்பு

சென்னை: சீன அதிபர் வருகையையொட்டி சென்னை முழுவதும் தங்கி உள்ள திபெத்திய மாணவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சீன அதிபர் வரும் 11ம் தேதி பிற்பகல் சென்னை வருகிறார். இதையடுத்து ெசன்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குற்ற பின்னணி உள்ள நபர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த நபர்களை போலீசார் கைது செய்தும் கண்காணித்தும் வருகின்றனர். மேலும், சீன அதிபர் வருகையின் போது திபெத்திய விடுதலை போராளிகள் மற்றும் திபெத்திய மாணவர்கள் சீன அதிபர் செல்லும் பாதையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு தாம்பரம் பகுதியில் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட இருந்த பெண் உட்பட 8 திபெத் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கோட்டாகுப்பத்தில் பதுங்கி இருந்த திபெத் நாட்டை சேர்ந்த நபரை கோட்டாகுப்பம்  போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர சென்னை முழுவதும் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரியமேடு பகுதியில் லாட்ஜில் தங்கி இருந்த கொலை குற்றவாளிகளான தண்டையார் பேட்டையை சேர்ந்த டேனியல், சோபன் ராஜ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சீனா அதிபர் தங்கும் கிண்டி நட்சத்திர ஓட்டல் மற்றும் மாமல்லபுரம் செல்லும் பாதைகளில் 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீனா அதிபர் செல்லும் நேரங்களில் மட்டும் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சங்க தலைவர் கைது

நீலாங்கரை போலீசார் பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அப்போது பாலவாக்கத்தில் வீட்டில் இருந்த கேளம்பாக்கம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த டென்சில் நோர்பு (34) என்பவரை கைது செய்தனர். இவர் திபெத்திய மாணவர்கள் சங்கத் தலைவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Tags : President ,Chinese ,Chennai ,Tibetan ,Chancellor , Chinese Chancellor visits, Tibetan students ,Chennai
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...